செய்திகள்நாவல்முத்தமிழ் அரங்கம்.

ஈரத்தீ (கோபிகை) – பாகம் 19!!

Novel

கவிந்து கிடந்த இருள், வெயிலை விழுங்கி விட,  வானம்,  மப்பும் மந்தாரமுமாக இருந்தது. 

இத்தனை நாட்கள் தகித்த வெயிலுக்கு, ஒரு மழை பெய்தால் இதமாக இருக்கும் என்பதே எல்லோரினதும் எண்ணமாக இருந்தது.

நீண்ட  விறாந்தையில் நடந்து வந்து,  அறைக்குள் நுழைந்து கையில் இருந்த கடிதத்தை மேடையில் வைத்து விட்டு  வெளியே பார்த்தேன்.
மழைக்கான அறிகுறிகள் சற்று வலுவாகவே இருந்தது.

காலையில் தந்த அலுவலக கடிதத்தைப் பார்த்ததில் இருந்து எனக்குள் பலவாறாக யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன.

“என்ன செய்வது என்பது புரியவில்லை, வண்ணமதியைத் தத்தெடுக்கும் பணி இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. விசுவமடு பகுதியில் காணி வாங்கி வீடு கட்டும் பணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

எல்லாம் இடைநடுவில் இருக்கும் போது,  இந்தக் கடிதத்தை ஏற்பது சாத்தியமா? ஆனால் வந்த கட்டளையை மறுக்கவும் முடியாதே.

அது,  வேறு ஒன்றும் இல்லை,  வடமராட்சிப் பகுதியில் உள்ள மந்திகை ஆதார  வைத்தியசாலைக்கு பணி மாற்றம் வந்திருந்தது.

என்ன செய்வது எனத் தெரியாமல் யோசனையுடன் இருந்த என்னை, அலைபேசி அழைப்பு சுயநினைவுக்கு கொண்டு வந்தது.

எடுத்துப் பார்த்தேன்,  எதிர் முனையில்,  மேகவர்ணன் அண்ணா தான்.

“சொல்லுங்கோ வர்ணன் அண்ணா?
“டொக்ரர்,  கனபேருக்கு பணி மாற்றம் வந்திருக்கிறது, உங்களுக்கு?
“ஓமோம்…..எனக்கும் வந்திருக்கிறது அண்ணா “
“ஓ…..எனக்கும் மாற்றம் தான் “
“எந்த இடம் அண்ணா?”
“வடமராட்சியில் மந்திகை”
“எனக்கும் அங்கு தானே அண்ணா”
“அப்பிடியே….நல்ல விசயம்,  பணியாளர் விடுதியில் தங்கலாம் தானே,    உங்களுக்கும் பாதுகாப்பு…..”
“அது சரிதான் அண்ணா,  ஆனால் இங்கு வேலைகள் எல்லாம் இடைநடுவில் இருக்கிறது.  அது தான் யோசிக்கிறேன்.

“அதுக்கென்ன டொக்ரர்,  வண்ணமதியின்ரை விசயம் தானே,  அங்கேயே வண்ணமதி படிப்பை தொடங்கட்டும், படிப்பு வசதி அங்கே அதிகம் தானே,  மற்றபடி வீட்டு வேலையை கிழமைக்கு ஒரு தடவை வந்து வந்து பாருங்கோவன், தவிர , உங்களுக்கும் அது பிறந்த மண் தானே,  எவ்வளவு நாளைக்கு தான்,  அம்மாவின்ரை நினைவுகளில் இருந்து தப்ப நினைத்து அந்த இடத்துக்கே போகமாட்டன் என்று இருப்பீங்கள், ஏதோ ஒரு கட்டத்திலை இதைச்  சந்திக்கத்தான் வேணும், நெடுக பயந்து பயந்து ஓட முடியுமே? சமர் தைரியமான பெண் தானே….ஒன்றும் யோசிக்காமல் அடுத்தடுத்த அலுவல்களைப் பாருங்கோ…எல்லாம் நல்லதுக்குத்தான்” என்ற மேகவர்ணன் அண்ணாவின் வரிகள் எனக்குப் புதுத் தெம்பு தந்தது.

“சரி அண்ணா,  நானும் போற அலுவல்களைப் பார்க்கிறேன், நன்றி…” என்று விட்டு மௌனமாக இருக்க,
“சரி,  டொக்ரர்,  நான் பிறகு கதைக்கிறன் “என்றதும்  அலைபேசியை வைத்தேன்.

மேகவர்ணன் அண்ணா ஒரு வித்தியாசமான மனிதர், என்னை விட , ஓரிரு வருடங்கள் வயது அதிகம் என்றாலும் எல்லா நேரங்களிலும் பெயர் சொல்லி அழைப்பதில்லை.
எப்போதாவது என் மனம் கனக்கும் நேரங்களில் என்னைத் தேற்றுவதற்காக மட்டுமே பெயரைச் சொல்வதுண்டு.
நினைவுகளினூடே அமர்ந்திருந்த  என்னை,
“டொக்ரர்,  விபத்து கேஸ் ஒன்று வந்திருக்கிறது” என்றபடி ஓடிவந்த தாதி சிவதியின் குரல் எழுந்து கொள்ள வைத்தது.

விபத்துப் பிரிவில் எட்டிப் பார்த்தேன், 
பதினெட்டும்  இருபதும் வயதுள்ள இரண்டு இளைஞர்கள்.  அதிக வேகமும்
இருவரும் போதை பாவித்திருந்தமையும் விபத்து ஏற்பட காரணம் எனக் கூறப்பட்டது.
அவர்களைப் பார்த்ததும் எனக்கு கோபமும் துக்கமும் ஒன்றாக வெளிப்பட்டது.
எங்கே போகிறார்கள் இந்த இளைஞர்கள்? இவர்களின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது ? தாங்களும் பாதிப்படைந்து மற்றவர்களையும் பாதிக்கும் இந்த முட்டாள்தனத்தில் இருந்து இவர்கள் எவ்வாறு மீளப்போகிறார்கள்?
போதைப்பாவனை இவ்வாறு கணக்கற்றுப் பெருகுகிறது என்றால் அழுத்தமான பின்புலம் இருக்க வேண்டுமே,

இவர்களின் எதிர்காலம் குறித்து மனதில் பெரிய 
வெறுமை தோன்றியது.   எத்தனை எத்தனை இளைஞர்கள்,  யுவதிகள் இப்படி வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். 
இவர்களுக்காக, இவர்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக எவ்வளவு தியாகங்கள்,  எவ்வளவு உயிர்க்கொடைகள்…

எண்ணங்கள் என்னை உலுக்க, நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியிட்டபடி எனது பணிகளைப் பார்க்கச் சென்றேன்.

தீ …..தொடரும். 

Related Articles

Leave a Reply

Back to top button