செய்திகள்நாவல்முத்தமிழ் அரங்கம்.

ஈரத் தீ (கோபிகை).- பாகம் 20!!

Novel

வெய்யோன் தனது கதிர்களை அள்ளித் தெளித்தபடி, காலைப் பயணத்தை ஆரம்பித்திருந்தான்.

‘ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்
ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்
ஹ்ம்ம் ம்ம் பாடவேண்டும் ஹ்ம்ம்…’

காரில் ஒலித்த பாடலை, சற்று குறைத்து விட்டபடி,  இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். பக்கவாட்டில் அமர்ந்திருந்த,  வண்ணமதி, எல்லாவற்றையும் வியப்போடு பார்த்தபடி,  வருவதை சின்னச் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்த எனக்குள், என்னுடைய சிறு வயது ஏக்கங்கள் வரிசைகட்டி, சோகம் பூசிக்கொண்டன.

எல்லோரும் ஒன்றாக இருந்த காலங்களிலும் சரி, அம்மாவும் நானுமாக வாழ்ந்த நாட்களிலும் சரி, வீட்டில் வறுமை சட்டம் போட்டு அமர்ந்திருந்தது என்பதுதான் உண்மை. 
இல்லாமை என்பது அன்றைய காலங்களில் எங்கள் வீடுகளில் அதிகமாக இருந்தது.

இவ்வாறான மகிழுந்துப் பயணங்கள்  என்பவை எண்ணிப்பார்க்கவே முடியாதவை.

அக்காலங்களில் மகிழுந்துகளைக் காண்பதே பெரிய விடயம்.

பெருமூச்சோடு நிமிர்ந்து அமர்ந்து கொண்டேன்.

எட்டு வயதான வண்ணமதி, ஒரு சின்னக்குழந்தை போலத் தோன்றினாள்.  அவளுக்குள்ளும் பூரிப்பு நிறைந்திருப்பது புரிந்தது.

எனக்கும் அதே உணர்வுதான். இத்தனை நாட்கள்,  தனிமை, தனிமை என்று வாழ்ந்த வாழ்க்கையில், என்னோடு ஒரு பந்தம் கூடவரப்போகிறது.

‘இவளை, தங்கை என்பதா, மகள் என்பதா….  ‘  எனக்குள்ளே  தோன்றிய எண்ணம்,  சட்டென்று திரும்பிய வண்ணமதி, அம்மா …..என்று அழைத்ததில் முடிவு கண்டது.  
“அம்மாதான்…
இவளுக்கு நான் அம்மாதான்….”
அவளுடைய அழைப்பின் தித்திப்பு, என் மனமெல்லாம் நிறைந்திருக்க, அவளது கன்னத்தில் செல்ல முத்தம் ஒன்றைப் பதித்தேன்.
  சற்று நிமிர்ந்து அவளும் எனக்கு முத்தம் ஒன்றைப் பரிசளிக்க, ஆத்மார்த்தமான அன்பின் இளையில் அவ்வேளை இருவரும் இறுக பிணைக்கப்பட்டோம்.

சற்று நேரம் கடக்க, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் கண்ணில்பட்டது.

காரை நிறுத்திவிட்டு, நானும் இறங்கி, வண்ணமதியையும் இறக்கி , கை பற்றி,  உள்ளே அழைத்துச் சென்றேன். 

ஏற்கனவே, விசாரித்தபடி உள்ளே சென்ற போது, நான் கண்ட காட்சி,  என்னை வியப்பில் ஆழ்த்தியது.

இருக்கையில் தேவமித்திரன் ஒரு சிறுவனோடு கதைத்தபடி,  இருப்பதைக்கண்டு  அருகில் சென்று  புன்னகைத்து  அமர்ந்து கொண்டேன்.

“வணக்கம் மித்ரன்…..” என் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த தேவமித்திரன்,.

“டொக்ரர்  ….என்ன இந்தப்பக்கம்?”  என்றதும்

வண்ணமதி அருகில் இருக்கும் போது, தத்தெடுப்பது பற்றி  எவ்வாறு கதைப்பது, என நினைத்தபடி,
“ஒரு அலுவலாக….” என்றேன் மொட்டையாக.

தலையை ஆட்டிய தேவமித்திரினிடம், நீங்கள் ஏன்?”  எனக் கேட்க வேண்டும் எனத் தோன்றினாலும், பேசாமல் இருந்து விட்டேன்.

சற்று நேரத்தில் நான் உள்ளே அழைக்கப்பட்ட.போதே,  தேவமித்திரனும் அழைக்கப்பட, 
நான் எழுந்து கொள்ள, வண்ணமதியும் எழுந்து நின்றாள்.
“இருங்கோ…நான் போய்விட்டு, வந்து உங்களைக் கூட்டிச் செல்கிறேன்” என்றபோது அவளுடைய முகத்தில் ஒரு அச்சம் பரவ,
“அகரன்…
தங்கச்சியைப் பார்த்துக்கொள்” என்று சொன்ன தேவமித்திரனின் வார்த்தைகள் என்னையும் அறியாமல் உடலை ஒரு கணம் சிலிர்க்கவைத்தது.

நாமிருவரும் ஒன்றாகவே உள்ளே நுழைந்தோம்.
அந்தக்காட்சி, மனதில் இனிய ஒரு சித்திரமாகப் பதிந்து போனது எனக்கு.

நிமிர்ந்து என்னைப் பார்த்த தேவமித்திரனின் பார்வையில் , இதே உணர்வு அவருக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை என்னால் உணரமுடிந்தது.

தீ …..தொடரும்.

Related Articles

Leave a Reply

Back to top button