செய்திகள்நாவல்முத்தமிழ் அரங்கம்.

ஈரத்தீ (கோபிகை) – பாகம் 15!!

Novel

நேரம்,  நண்பகலை நெருங்கிக் கொண்டிருக்க அந்தப் பிரதான வீதியில் வாகனங்கள் விரைந்தவண்ணம் இருந்தன.
வீதியில் நடப்பவர்கள், அங்கும் இங்குமாக விரைந்து நடந்தனர். வெயிலின் தகிப்பு, வியர்வையில் குளிக்கச் செய்திருந்தது.  மகிழுந்துப் பயணம் என்பதால் எனக்கு வியர்வைக் கசகசப்பு தெரியவில்லை.  அதுவும் எனக்கு ஒருவகை குற்ற உணர்ச்சியாக இருந்தது. எல்லோரும் துன்பம் அனுபவிக்க நான் மட்டும் சொகுசாக இருப்பது போல தோன்றியது.

தூரத்தில்,  பதினெட்டு, அல்லது இருபது வயது மதிக்கத்தக்க இளம் தாய் ஒருவர்,  தலையில் ஒரு துணியோ , கையில் குடையோ இல்லாமல் கைக் குழந்தையுடன்  விரைந்து நடப்பதைக் கண்டதும் மனதில் கோபமும் வேதனையும் ஒன்றாகவே தோன்றியது.

வேகமாகச் சென்று அவசரமாகக் காரை நிறுத்திவிட்டு, அந்த தாயின் அருகில்  இறங்கினேன்.

என் மகிழுந்தைப் பார்த்ததும் நான் ஒரு வைத்தியர் என்பதைப் புரிந்து கொண்ட அந்த இளம் பெண்,  சற்று பயத்துடன் இறுகிப்போய் நிற்க,

“ஏன் அம்மா,  பிள்ளைக்கு தலையில் துணியோ, அல்லது கையில் குடையோ கொண்டு வரவேண்டும் என்று தெரியாதா? கொளுத்தும் வெயிலில் பச்சைக் குழந்தையைக் கொண்டு போகும் போது இப்படிப் போகலாமா?”
எனக் கேட்டுக் கொண்டே,  மகிழுந்துக்குள் இருந்த குடையையும், எப்போதேனும் தேவைப்படலாம் என வைத்திருந்த துவாயையும் எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டு,  நிமிர்ந்தேன்.

நிராதரவான தோற்றத்தில் நின்ற அந்தப் பெண்ணின் விழிகளுக்குள்  நீர் குளம் கட்டியது.  சட்டென்று எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.  அந்தப் பெண் ஏதோ சொல்ல நினைப்பது புரிந்தது.

தாயின் கையிலிருந்த ஆறு மாதமளவிலான  குழந்தை வியர்வைக் கசகசப்பில் அங்கும் இங்கும் நெளிந்து தன் தலைமுடியைத் தானே பிய்த்துக்கொண்டது.

“என்னடாம்மா……? ” விரிந்திருந்த அதன் கரத்தில் விரலை வைத்தபடி கேட்டேன்.
பதில் சொல்லத் தெரியாத அந்தக் குழந்தை,  என் விரலை இறுகப்பற்றியபடி, பொக்கை வாயைத் திறந்து சிரித்தது.

பெருமூச்சோடு நிமிர்ந்த போது,  எதிரே அம்மாச்சி கடையில் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் கண்டுவிட்டு, வழி ஒன்று கிட்டிய சந்தோசத்தில், 
“அம்மா…வாங்கோ….”என்றபடி, அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு நடந்தேன்.

உள்ளே சென்றதும் கதிரை ஒன்றில் அந்தப் பெண்ணை அமர வைத்து விட்டு,  விரைந்து சென்று இரண்டு பழப்பானங்களையும் உளுந்து வடையையும் வாங்கி வந்து, பழப்பானம் ஒன்றையும் வடையையும் அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டு,  எதிரே இருந்த கதிரையில் அமர்ந்தபடி,

“அம்மா….குடியுங்கோ” என்றுவிட்டு நானும் குடிக்கத் தொடங்கினேன். 
மடியில் இருந்த குழந்தை கிளாசைப் பிடித்து  விளையாடிக் கொண்டிருக்க,  மளமளவென மூன்று வடைகளையும் சாப்பிட்டு பானத்தை அருந்திய அப்பெண் என்னைச் சங்கடமாக பார்ப்பதை உணர்ந்து மறுபக்கம் திரும்பிவிட்டேன்.

என் வாழ்நாளில் அப்படி ஒருவர் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை.  மனம் கனத்துப் போயிற்று எனக்கு. 

மெதுவாகத் திரும்பிய நான்,  “தோசை சாப்பிடுகிறீர்களா ?” என்றேன் .
அந்தப் பெண் மௌனமாகவே இருக்க, எழுந்து சென்று இரண்டு தோசைகளை வாங்கி வந்து கொடுத்த போது, அந்தப் பெண்ணின்  விழிகளுக்குள் தேங்கிக்கிடந்த நன்றியை என்னால் உணரமுடிந்தது. கையில் இருந்த குழந்தை இப்போதும் பொக்கை வாயைத் திறந்து சிரித்தது.

என்னம்மா பிரச்சினை? எங்கே போய்.வருகிறீர்கள்? என்றேன் மெதுவாக.

கணவன், யாருக்கோ மணல் ஏற்றச் சென்றபோது காவல்துறை கைது செய்துவிட்டதாகவும் பிணை கிடைக்காததால் சிறைக்கு கொண்டு சென்று விட்டதாகவும் மூன்று நாட்களாக சமைக்கவில்லை எனவும் கூறிவிட்டு,  கண்ணீர் வடித்த அந்தப் பெண்ணை , என்ன சொல்வது என்று புரியவில்லை.

இருபது வயது தான் இருக்கும். காதல் திருமணமாம், யாருமே ஒட்டுறவு இல்லையாம்.

‘இதற்கு என்னால் என்ன செய்யமுடியும்? ‘
அப்போது தான் தேவமித்திர னின் ஞாபகம் வந்தது.

நண்பர் ஒருவரிடம் பேசிப்பார்ப்பதாகச் சொல்லிவிட்டு,  என்னுடைய தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்து விட்டு   மெல்ல எழுந்து கொண்ட நான்,  அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கரங்களுக்குள் ஐயாயிரம் ரூபா தாள் ஒன்றை வைத்துவிட்டு சிறு தலை அசைப்புடன் வெளியே வந்தேன். மனம் சற்றே இலேசாகியிருந்தது.  

வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமான ஒன்று.   எண்ணமிட்டபடி, காரை எடுத்தேன்.

‘கண்டா வரச் சொல்லுங்க…கர்ணனை கையோடு கூட்டி வாருங்கள் …

ஸீ தமிழ்  தொலைக்காட்சியில் கில்மிஷா பாடிய பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தபடி,   காரை வளைத்துத் திருப்பி, அந்த பராமரிப்பு இல்லத்திற்குள் நுழைந்தேன்.

எப்போதும் வரும் போது அவர்களுக்காக ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் வாங்கி வருவது வழமை. அன்றும் , வாங்கி வந்தவற்றை, பொறுப்பாக இருக்கும் பெண்ணிடம் கொடுத்து விட்டு,  வண்ணமதிக்காக வாங்கியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு,

அருட்தந்தையிடம் சொல்லிவிட்டு வண்ணமதியை அழைத்துக்கொண்டு  மரம் ஒன்றின் கீழே இருந்த கல் கட்டில் அமர்ந்து கொண்டேன்.

இரண்டு மணித்தியாலங்களாக அவளும் நானுமாக , பல விடயங்கள்  பேசிக்கொண்டோம்.

நேரம் எங்களை மிக நெருக்கமாக்கியிருந்தது.  இப்போது,  அவளுடைய தலை என் மடி மீது இருக்க, சிறு குழந்தை போல மகிழ்வுடன் பேசிக்கொண்டிருந்தாள் வண்ணமதி.

அப்போது தான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது.  ‘வண்ணமதியைத் தத்தெடுத்துக்கொண்டால் என்ன……’

தீ …..தொடரும். 

Related Articles

Leave a Reply

Back to top button