இலங்கைசெய்திகள்

புலிகள் மீளுருவாக்கம் – 15 பேர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்!!

Tigers regenerate

கடந்த மார்ச் 25 ஆம் திகதி அரபிக்கடலில் மீன்பிடிக் கப்பலில் வைத்து இந்தியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 15 பேர் மீதும், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் அளிக்க முயன்றதாகவும் இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அவர்களிடமிருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இலங்கையின் குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து ரவிஹன்சி என்ற மீன்பிடிக் கப்பலில் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் 300 கிலோ ஹெரோயின் மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக கொச்சியில் உள்ள முகவரகத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.வை.நந்தன, ஜனக தேசப்பிரிய, நமேஷ் சுல்லக்க செனரத், திலங்க மதுஷான் ரணசிங்க, தடல்லகே நிஸ்ஸங்க, ஏ.சுரேஷ் ராஜ், எல்.வை.நிஷாந்த சுத்தா, ஏ.ரமேஷ், சற்குணம் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலராவர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் ஈரான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொள்வனவு செய்து கடல் வழியாக இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்களில் இவர்கள் கலந்து கொண்டதாகவும், இந்தியாவிலும் இலங்கையிலும் அதன் செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்றதாகவும், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகப் போரில் ஈடுபட்டதாகவும் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஏ.ரமேஷ், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெருந்தொகையாக நிதியையும் சொத்துக்களையும் சேகரித்துள்ளார்.

இரு நாடுகளிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் பயங்கரவாத செயல்களை புரிய தயார்படுத்துவதற்கும் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அகதியாக வசித்து வந்த மற்றொரு பிரதிவாதியான சற்குணம், இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்புப் படையில் உறுப்பினராக இருந்ததாகவும் அம்முகவரகம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button