Uncategorized

ஈரத்தீ (கோபிகை) – பாகம் 23!!

முகம் நிறைந்த மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்த மகனை அன்பு ததும்ப பார்த்தார் தேவமித்திரனின் தந்தையார்.
“அப்பா….அகரன் வீட்டுக்கு வந்த நேரம் எவ்வளவு அதிஸ்டம் என்று பாத்தீங்களா?  எங்கட  சமரை…இவ்வளவு காலம் தேடின பொக்கிஷத்தை வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறான்…”

பெருமிதம் மின்ன மகன் கூறிய வார்த்தைகளில்
அகரன் மீது  மகனுக்கு இருந்த பாசமும் சமர்க்கனி மீது மகனுக்கு இருந்த காதலும் நன்றாகவே தெரிந்தது.

” சமர், பெரிய மனுஷி மாதிரி இருக்கிறாள் , சாதாரணமாக கடையில் போய் தேநீர் குடிப்போம் என்றதற்கு நிறைய யோசிக்கிறாள் , ஆனா அப்பா…தனிய இருந்து சரியா கவலைப்பட்ட  வாழ்க்கையை வாழ்ந்தாலும்  சமர் தன்னைத்தானே  புடம் போட்டிருக்கிறாள்…எனக்கு ….அவ்வளவு சந்தோசமாக இருந்தது அப்பா…..பாருங்கோ அப்பா,  எங்களை பார்த்த உடனேயே அடையாளம் கண்டு பிடிச்சிட்டாளாம்…..அப்பிடி எண்டால், அவளின்ரை அடி மனசிலை நாங்கள் அப்பிடியே இருக்கிறம் எண்டு தானே அர்த்தம்….”

மகனின் குதூகலம் அவனது அடிமனதின் சந்தோசத்தை   படம் பிடித்துக் காட்டியது. சமர்க்கனி மீது அவனுக்கு இருந்த ஆழமான அன்பை கண்டு வியந்து போனவராக,

“தேவா, சமரை வீட்டை வரச்சொன்னனியே?” எனக் கேட்டார்.
“அப்பா…நான் அவளைக்கண்ட சந்தோசத்திலை அதை மறுந்து போனன்….நான் சொல்லுறன் ….வர்ணனிட்டை இலக்கம் வாங்கி சமரோடை கதைக்கிறன் அப்பா….” என்றவன்,   உடனேயே மேகவர்ணனுக்கு அழைப்பை எடுத்தான்.

எதிர்முனையில் , அழைப்பு ஏற்கப்பட ” மச்சான்   ….சொல்லடா” என்ற மேகவர்ணன்

“என்னடா செய்கிறாய், எப்படி இருக்கிறாய் ?”   என்ற தேவமித்திரனின் சம்பந்தமில்லாத கேள்வியில் தலையைச் சரித்து அலைபேசியை சற்று உற்றுப் பார்த்தான்.

“டேய்…மித்ரன்…நீதானேடா… ? ” என்றான் குறும்போடு. ..

“நான்தான் டா…”குரல் குழைந்தது  தேவமித்திரனுக்கு.

“டேய்…டேய்….இதென்னடா…
பொம்பிளைப்பிள்ளை மாதிரி குரல் எல்லாம் ஏதோ வர்ணம் பூசிவருது… “

“சீ..போடா…நீயாவது சொல்லியிருக்கலாமேடா…”

“எடேய்…என்ன ….என்னத்தை சொல்லுறாய்….”

“டேய்..மச்சான்…அந்த டொக்ரர்…அது…அது…சமர்க்கனி..”

“ஓ…சமர்க்கனி தான்..அதுக்கென்ன…”

“அவள் என்ர…”ஏதோ சொல்ல வாயெடுத்துவிட்டு , என்ர “சின்ன வயசு தோழி…”என்றான்.

ஓ….அதுதான் அண்டைக்கு உன்னைப் பார்த்த உடனே, அவவின்ரை முகத்தில் அப்பிடி ஒரு சந்தோஷம் வந்ததே…..

உண்மையாவோடா….ஏன் நீ என்னட்டை அப்பவே  சொல்லேல்லை…..எவ்வளவு காலமாக நாங்கள் சமரைத் தேடுறம் தெரியுமே….

மச்சான்..நீ. ..சரியான அமுக்குணி…நீ எப்ப என்னட்டை சமரைப்பற்றிச் சொன்னனி? நீ மனசிலை நினைக்கிறது எனக்கு 
எப்பிடியடா  தெரியும்?

எங்க….சொல்ல சந்தர்ப்பம் வரவில்லை மச்சான்….

போடா…..நீ….கதைக்கிற தோரணையைப்  பார்த்தால் எனக்கு என்னென்னவோ யோசனை வருது…ஆனால்..நீதான் ஒண்டும் சொல்லமாட்டியே….

அப்படி இல்லையடா…சமர்…சமர்…
அம்மா எனக்காக ஆசைப்பட்ட மருமகள் டா…. எங்கையடா…களமுனை…
சரணடைவு…எண்டு…காலம் ஓடிப்போட்டுது….

இப்ப சமர் என்ன மனநிலையில், எந்த மாதிரி வாழ்க்கை சூழ்நிலையிலை இருக்கிறாளோ….அது கிடக்கட்டும்.. அப்பா சமரோடை கதைக்கவேணுமாம்….நீ வைத்தியர் அம்மாட இலக்கம் தா” என்றான்.   

வைத்தியர் அம்மா என்று சொன்னபோது கனிந்து ஒலித்த தேவமித்திரனின்  குரல் ஆயிரம் விசயங்கள் சொன்னது மேகவர்ணனுக்கு. 

நண்பனுடனான அலைபேசி உரையாடலை முடித்து விட்டு வெளி விறாந்தையில் வந்து அமர்ந்தார் தேவமித்திரன். 

தொடரும்….

Related Articles

Leave a Reply

Back to top button