கவிதைமுத்தமிழ் அரங்கம்.

அம்மா. .!!

Mother

பொய்க்காரி

வாழ்த்து தெரியாது.
பூங்கொத்து தெரியாது.
பரிசு தெரியாது.

அன்னையர் தினம்
தெரியவே தெரியாது.

ஆனாலும் நீயெனக்கு ,
அம்மாவாக இருந்தாய் அம்மா.

ஒரு உதவி
நாம் செய்ததுமில்லை.
நீ எதிர்பார்த்ததுமில்லை.

எல்லோரும்
சாப்பிட்ட பிறகு சாப்பிட்டாய்.
எல்லோரும்
படுத்த பிறகு படுத்தாய்.
எல்லோருக்கும் முன் எழும்பி
தேத்தண்ணி ஆத்தினாய்.
ஊதாங்குழலில் புரக்கேறியது உன் மூச்சு.
பொச்சுமட்டையால் கரிச்சட்டி கழுவி
தேய்ந்தன உன் கைகள்.

யாருமுன்னை
சாப்பிட்டாயா? என்று கூட
கேட்டதாய் ஞாபகமே இல்லையே அம்மா!
உனக்கு இருக்கிறதா ? என்று
பார்த்துச் சாப்பிட்டதாகவும்
வரலாறுகள் இல்லையே!

யாருக்குப் புரக்கேறினாலும்,
நீயே முதல் ஓடிச் செம்பெடுத்தாய்.
யாருக்கு கல் கடிபட்டாலும்
நீயே பதறிப் போனாய்.
எப்போதாவது தலைமயிர் வந்தாலும்,
குற்றவுணர்வில் கலங்கினாய்.

யாரும்
ஆறுதல் சொல்லவேயில்லைத் தானே!

பூச்சியுருண்டைகளுக்குள் மடித்து வைத்த
உன் சேலை வாசங்களை
நுகர்ந்து வளர்ந்த பிள்ளை நான்.
ஒரு சேலைக்கு கூட
நீ ஆசைப்பட்டதுமில்லை.
யாரும் அன்பளித்ததுமில்லை.

ஒரு நாள்
ஒரேயொரு நாளேனும்,
நீ அவித்துக் கொட்டச் சலித்ததில்லையே!
உன் ஆயுள் வரலாற்றில்.

எப்படியம்மா ?
எப்படி இத்தனை மகாத்மாவாகி வாழ்ந்திருக்கிறாய் சொல்!

முட்டுக்காய் திருவிப் புட்டவிப்பாய்.
இருபது ரூபாய்க்கு இறால் வாங்கி
எண்ணாமல் எண்ணிப்
பங்கிட்டுக் கொடுக்கும்
கணிதம் தெரிந்தவள் நீ!

உன்னைப் போலொரு சமையற்காரர்
உலகத்திலொருபோதும்
பிறக்கப் போலதேயில்லையம்மா!
நீ
அன்பள்ளிப் போட்டுத் தாழித்த
மகா சொர்க்கச் சமையல் ருசியது.

நீ சுவாமியறைக்குள் நுழையாத
அந்த மூன்று நாட்களிலும்,
வீடு வெளிச்சமற்றிருந்தது.

உன் பித்தை வெடித்த கால்களுக்குள்
இரத்தம் கசிந்த போதும்,
யாருனக்கு ஒத்தடம் கொடுத்தோம்?
நீயே வலித்து, நீயே ஆற்றிய
தாய்க் காயங்களல்லவா அவை.

நாரி நோ,
முதுகு நோ,
முள்ளந்தண்டு நோ,
குதிக்கால் நோ
இன்றெனக்கிருக்கிற இத்தனை நோவிலும்,
ஒன்று கூடவா?
உனக்கில்லாது இருந்திருக்கும்.

நீ! சரியான பொய்க்காரி.
எங்களை ஏமாற்றி ஏமாற்றி
வலி பழகியிருக்கிறாய்.

இன்றுனக்கு
அன்னையர் தினப் படம் காட்டுவதில்,
என்ன நியாயம் இருக்கப் போகிறது?

நானொரு போதும்
உனக்கு சொல்லவே மாட்டேன் அம்மா.

ஒரு உப்பற்ற வாழ்த்து.

தீபிகா
13.05.2023
10.08 Pm.

” நீள நினைதல் “

தீபிகா

அன்னையர்_

தினம்

பெண்கள்

அம்மா

Related Articles

Leave a Reply

Back to top button