கட்டுரைசெய்திகள்

குறள் தரும் விளக்கம் – ரதி மோகன்!!!

Artcle

 வெள்ளியில் ஒரு திருக்குறள்

அதிகாரம் – 34

நிலையாமை

“குடம்பை தனித்துஒழியப்புள்பறந்து அற்றே உடம்போடு உயிர்இடை நட்பு”

வள்ளுவப்பெருந்தகை கூறுகிறார்..உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு கூட்டிற்கும் பறவைக்கும் உள்ள தொடர்பு போன்றது. கூட்டைத்தனியே விட்டு விட்டு பறவை எந்தநேரத்திலும் பறந்து போய் விடும்..

அத்தகைய நிலையில்லாத இந்த உடம்பும் வாழ்க்கையும். அதற்கிடையில் எமக்குள் எத்தனை எத்தனை பேதங்கள் ?நிறம், மதம், இனம்,ஏழை,பணக்காரன் என்ற அடிப்படையில் மனிதர்களிடையே நடக்கிறது முரண்வாதம்.  ஒவ்வொருமனிதர்களுக்குள்ளும் “நான்” என்ற அகங்காரம் ஆட்சி செலுத்துகிறது.  ஆதிக்கமும் அரக்ககுணங்களும் கொண்டதாக மனிதகுலம் மாறிக்கொண்டிருக்கிறது.  செய்தி ஊடகங்களில் அருவருக்கத்தக்க செய்திகளும் ,வன்முறை,  கொலை, கொள்ளை சம்பந்தப்பட்ட தகவல்களுமே நாளுக்கு நாள் வந்த வண்ணம் இருக்கின்றன. கீழைத்தேய நாடுகளில் மட்டுமல்ல மேற்கத்தைய நாடுகளிலும் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இப்படியே நம் வாழ்க்கை தொடர்ந்தால் நாளை என்னவாகும்?நாளைய  சந்ததிக்கு நாம் எதை விட்டுவிட்டுச் செல்லப்  போகிறோம்? 

வஞ்சம் தீர்ப்பதையா?பொறாமைப்படுவதையா?அடுத்தவரை அவமதித்தலையா?கொடுஞ்சொற்கள் பேசுதலையா? ஒற்றுமையின்மையையா? எதை இளைய தலைமுறையினரிடம் கையளிக்கப் போகிறோம்? அல்லது அன்பும் பண்பும் நிறைந்த நற்குணங்களைக்கொண்ட நல்ல பிரஜைகள் கொண்ட சமுதாயத்தை எப்படி வளர்த்தெடுப்பது என்பதை சொல்லிக்கொடுக்கப் போகிறோமா?

இதை சற்று சிந்தித்தோம் என்றால் வாழ்க்கை என்றால் என்ன என்ற அடிப்படை உண்மையை தெரிந்து கொள்வோம்  

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே பூமிப்பந்தில் வாழ்வதற்கான ஒரு போராட்டமே வாழ்க்கை.  ஒரு நேர உணவிற்கு கஸ்டப்படுபவனில் இருந்து கோடீஸ்வரன் வரை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததுதான் இந்த வாழ்க்கை.  ஒவ்வொருவரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

அதேநேரம் அது நிலையற்றது என்பதை நினைக்க தவறி விடுகிறோம்..

இந்த வாழ்க்கை கடவுள் தந்த வரம். அதை நல்ல வழியில் வாழப்பழகிக்கொள்ளுதல் வேண்டும். அதற்கு வாழ்வின் நிலையாமை பற்றிய ஒரு பயம் எமக்குள் வர வேண்டும். 

அழகு அழகு என அதை தேடியே ஓடுகிறோம் . உடம்பை அழகாக வைத்திருக்க எத்தனையோவகையான கீறீம்கள் ,அழகுசாதனப்பொருட்களை உபயோகிக்கிறோம்.  தேகாரோக்கியத்திற்காக ஆகாரம், உடற்பயிற்சி எடுத்து பராமரிக்கிறோம். எது எப்படியோ இந்த உடல் அழியக்கூடியது. வயது முதிர்ந்த பின்னாடியோ அல்லது  இளமையிலோ  எந்த நேரத்திலும் இறப்பு நேரிடலாம்..இதை யாரறிவார்? இதை அறிந்தால் அவன் ஞானி.

உடலை விட்டு  உயிர் பிரிந்தால் ” பிணம்” என்றே  அழைக்கப்படுவோம்..பெற்றோர் வைத்த அழகான பெயர் மறைந்து போய்விடும்.

 ” வீடு வரை உறவு,வீதி வரை மனைவி,  காடு வரை பிள்ளை. கடைசி வரை யாரோ?? என எழுதி வைத்தார்  கவிஞன் கண்ணதாசன்..உறவுகள்   எம்மோடு கூட வரப்போவதில்லை. சேர்த்து வைத்த சொத்து கூட வந்து விடுமா?உடம்பை(பிணத்தை) எடுத்துக்கொண்டு போவதற்குள் பிள்ளைகளுக்கிடையில் சொத்துச்சண்டை கிளம்பும்..நாளடைவில்  உறவுகள்  பிரிந்தவரை மறந்தே போவார்கள். வருடத்தில் ஒருநாள் திவசம்  வரும். அன்று மட்டும் பிரிந்தவர் பேசப்படுவார்..இன்றைய இளையதலைமுறை இவற்றையும் பின்பற்றுமா என்பது கேள்விக்குறியே. 

இதற்குள் மனிதருக்குள் துவேஷம், கோபம், வெறி, வஞ்சம்.. ஏன் இவையெல்லாம்? எதற்காக?? எமை ஒருகணம் கேள்வி கேட்டுத்தான் பார்ப்போமே.. 

இன்னொரு உயிரை வதைக்காமல் இந்த உடலை  உயிர் விட்டு பிரியும் வரை நன்மைதான் செய்ய முடியாது போனாலும் தீமையாவது செய்யாது வாழ்ந்துவிட்டுப்போவோமே..

இந்தப்பிறவியில் நாம் சேர்த்து வைத்த பாவபுண்ணியங்களுக்கேற்பவே நம் அடுத்த பிறப்பும் அமையும்..

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்

திணை விதைத்தவன் திணை அறுப்பான்” என்பதை நினைவில் நிறுத்தி ,நிலையற்ற வாழ்வில் என்றும் நிலைத்து நிற்கும் நற்பண்பையும் ,அன்பையும் இளையோரிடம் விட்டுச்செல்வோமே. 

அன்போடு

  ரதிமோகன் டென்மார்க்

Related Articles

Leave a Reply

Back to top button