இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அதிசொகுசு பேருந்து விபத்துக்கு இதுதான் காரணமா!!

accident

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட அதி சொகுசு பஸ் வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் நேற்று அதிகாலை 12.20 மணியளவில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில், விபத்து இடம்பெற்றபோது பலர், விழித்திருந்தமையால் பஸ்ஸின் கம்பிகளைப் பிடித்து அதிகளவானோர் உயிர்ச் சேதங்கள் இன்றி தப்பித்தனர். என விபத்துக்குள்ளான குறித்த அதிசொகுசு பஸ்ஸில் பயணித்துக் காயமடைந்த யாழ்.வடமராட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 4 பேர் நேற்று மாலை வீடு திரும்பினர்.

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவியான நாவலப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் சயாகரி (வயது – 23), பஸ் சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32), இன்பர்சிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) ஆகியோரே உயிரிழந்தனர். உயிரிழந்த முதலாம் வருட மாணவியான சயாகரி, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் உயிரிழந்தார்.

இதேவேளை, நிதர்சன் வெளிநாடு செல்லும் பயண ஏற்பாட்டுக்காகக் கொழும்புக்குச் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

விபத்துத் தொடர்பில் காயமடைந்த வடமராட்சியைச் சேர்ந்தவர் தெரிவித்ததாவது,

“இரவு 11.45 மணியளவில் கனகராயன்குளத்தில் உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டது. சுமார் 10 அல்லது 15 நிமிடங்களில் அங்கிருந்து பஸ் புறப்பட்டது.

தேநீர் அருந்தி, உணவு உண்டமையால் பஸ்ஸில் பெரும்பாலானவர்கள் விழிப்பாகவே இருந்தார்கள். சுமார் 20 நிமிடத்தில் பஸ் வளைவு ஒன்றில் திரும்பியது. இதன்போது பஸ் கொஞ்சம் தளம்பியதை உணர முடிந்தது.

அந்த வளைவைத் தொடர்ந்து வந்த மற்றொரு வளைவில் மதகுடன் இதேபோன்று திரும்பும்போதே மோதியது.

அந்த மதகுடன் அமைந்திருந்த நடைபாதை போன்ற ஒற்றையடி பாதையில் பஸ்ஸின் ஒரு சில்லும், மதகின் மற்றைய பக்கத்துடன் பஸ்ஸின் பின்முனையும் மோதி சாரதியின் இருக்கைப் பக்கமாக பஸ் சரிந்து விழுந்தது. பெரும்பாலானவர்கள் விழித்திருந்தமையால் பஸ் சரியும் போதே கம்பிகளைப் பிடித்து தப்பினர்.

சாரதியும், பல்கலைக்கழக மாணவியும் தூக்கி வீசப்பட்டு கல்லுடன் மோதுண்டிருந்தார்கள். மற்றையவர், கண்ணாடி உடைந்து வெளியே விழுந்துள்ளார். அவர் மீதே பஸ் சரிந்து வீழ்ந்தது.

பின்னால் இன்னொரு அதிசொகுசு பஸ்ஸும் வந்தது. அதுவும் தளம்பியவாறே வந்தாலும், சாரதியின் சாதுரியத்தால் விபத்திலிருந்து தப்பித்தது. வீதியை விட்டு விலகினாலும் விபத்து ஏற்படவில்லை.

அந்த பஸ்ஸில் வந்தவர்களும் உடனடியாக உதவிகளைச் செய்து எமது பஸ்ஸில் பயணித்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.

பஸ்ஸின் நடத்துநர் இளைஞர் ஒருவரே. அவர் முதல் தடவையாக இந்த பஸ்ஸில் பணியாற்றினார். அவரும் எங்களுடன் கம்பியைப் பிடித்தே உயிர் தப்பினார். சாரதி உயிரிழந்ததைப் பார்த்ததும் பயத்தால் அவர் அங்கிருந்து ஓடி விட்டார்” – என்றார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இந்த விபத்து உள்ளடங்கலாக நேற்று மாத்திரம் 3 அதிசொகுசுப் பஸ் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்தில் மாத்திரமே பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியா, நொச்சிமோட்டைப் பாலதுக்கு அருகில் விபத்துக்குளான அதிசொகுசு பஸ்ஸை மீட்கும் பணியில் நேற்றுக் காலை இராணுவத்தினர் ஈடுபட்ட போது ஏ – 9 வீதிப் போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகப் பாதிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button