நாவல்முத்தமிழ் அரங்கம்.

பூவிழிவாசம் – கோபிகை!!

poovilivasam

மின்மினியை

நட்சத்திரமாய்

பார்க்கவைக்கும்.

காதல்,

அது அன்பின் அகராதி,

வீரனைக் கோழையாக்கும்,

கோழையை வீரனாக்கும்.

இதயங்கள் இடம்மாறி,

உருவமில்லா சிற்பம் செய்யும்.

இதய அறைக்குள்

இமயம் வளர்க்கும்.

ஒற்றைச் சொல்லுக்குள்

ஓராயிரம் உணர்வு செய்யும்.

பார்க்கத் துடிக்கும்

பார்க்காமலும் வாழும்,

நினைவுகளின் நீட்சியில்

நித்தமும் கதைபேசும்,

அது பாமரத்தனத்தில் தான்

பரிணமித்து உயிர்வாழும்.

அதற்கு பணம் வேண்டாம்,

அது பாசம் கேட்கும்,

உல்லாசம் தேடாமல்

உயிரில் உறவாடும்.

காதல்…..

கண்களைக் களமாக்கும்,

வென்றவன் தோற்பதும்

தோற்றவன் வெல்வதும்

காதலில்தானே……

காதலின் ஆலாபனையாய்….

ஒரு பூவிழியின் வாசம்…..

காதல் ……. அது எத்தனை இனிமையான உணர்வு……சேர்ந்துவிடும் காதலை விட சேராத காதலில்தான் உதிராமல் இருக்கும் உண்மைநேசம். அப்படி சேராத ஒரு காதலின் கதைதான் இந்த பூவிழி வாசம்.

அன்பும் கருணையும் ஒருங்கே நிறைந்த ஒரு கிராமத்துப் பெண்தான் இந்தக் கதையின் நாயகி பூவிழி. பெற்றவர்களை இழந்து பாட்டியோடு வாழ்ந்த அவள் வளர்ந்ததெல்லாம் பராமரிப்பு இல்லத்தில்.

 பூவிழியின் அன்பில் குளித்து, அவளது நேசத்துக்குச் சொந்தக்காரனாகி சந்தர்ப்ப வசத்தால் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட  நாயகன் பொற்செழியன்.

பொற்செழியனுக்கு அம்மா என்றால் பிரியம் அதிகம், அதேபோல தம்பி தங்கைக்காக சிறு வயது முதலே விட்டுக்கொடுத்துப் பழகிவிட்டவன் அவன். தம்பி இளஞ்செழியன், தங்கை வண்ணமதி தந்தையார் பரமானந்தத்தார், தாய் பத்மாவதி இவர்கள்தான் அவனுடைய உலகம்.

அவனது வாழ்க்கையை தெரிந்தே பறித்ததாலோ என்னவோ அவனது தாய் சில மாதங்களிலேயே இறந்துவிட இரண்டு வலியும் மலையளவு பாரமாய் பொற்செழியனின் மனதில் ஆழ்ந்து விடுகிறது.

இவர்கள் மீதான அன்பின் காரணத்தினால்தான் தன் காதலையும் அவன் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. அம்மாவின் வார்த்தைக்காய் விட்டுக் கொடுத்து வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துவிட்டானே தவிர அந்த வாழ்க்கையில் அவன் சந்தோசமாய் வாழ்ந்தானா, அவனைத் திருமணம் செய்த பெண் புரிந்துணர்வு மிக்கவளா  என்பதும், காலஓட்டத்தில் அவன் தன் காதலியைச் சந்தித்தால் அவனுடைய மனநிலை எப்படி இருக்கும் எனபதும்தான் கதை.

காதலித்தவர்கள் தற்செயலாய் பிரிந்தபின் சந்திக்க நேர்ந்தால் அதன் வெளிப்பாடு, தவிப்பு, தடுப்பு என அத்தனை உணர்வுகளையும் கொட்டியிருக்கிறது இந்த நாவல்.

பருவக்காதல், பள்ளிக்காதல் பல நேரங்களில் பாதியோடு முடிந்துவிடுகிறது. ஆனால் அந்த பாதியின் பின்னாலும் தன் நேசத்துக்குரியவனின் வீட்டில், அவனது உறவுகளைக் கண்ணும் கருத்துமாய் பார்த்தபடி ஒரு பெண் வாழ்வதென்பது, ஆழக்காதலின் அற்புதம் தானே.

தான்கொண்ட காதலின் காரணமாய் தன்னவன்  வீட்டை ஒரு கோயிலாய்ப் பேணுகிறாள் கதையின் நாயகி பூவிழி

நாளோட்டத்தில் பூவிழிக்கு ஒரு உண்மை தெரியவருகிறது. அதாவது அந்த வீட்டின்  பெரியவர் பரமானந்தத்தாரும் தன் இளமை வாழ்வில் ஒரு இனிய காதலை அனுபவித்து, ஒரு இல்லற வாழ்க்கையை வாழ்ந்து அப்போதைய சூழ்நிலையால் தன் காதலியைப் பிரிந்துவிடுகிறார் என்பது.

அவரது காதலியாய் ஒரு மகனின் தாயாய் முதியோர் இல்லம் ஒன்றில் பராமரிப்பாளராய் வாழும் பத்மினியம்மாவை தானே பெரியவரின் அனுமதியோடு அவர்களின் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறாள் பூவிழி.   

சமையல் வேலைக்காக வரும் பத்மினியம்மாவிடம் பரமானந்த்த்தாரின் பிள்ளைகளும் அன்போடு ஒட்டிக்கொள்கின்றனர். அவரும் எட்டநின்று பாசத்தைக் காட்டுகிறார்.

மனைவியை இழந்த துயரில் சோர்ந்திருந்த பரமானந்தத்தாரை தள்ளி நின்ற பத்மினியம்மாவின் அன்பும் பூவிழியின் நேசமும் தேற்றிவிடுகிறது.

தனக்கு ஒரு மகன் இருப்பதை, அவனது வாழ்க்கை சீரழிந்த நிலையை அறிந்த பரமானந்தத்தார் தன் முதல் மகனுக்காய் பூவிழியையே உதவிகேட்க, தன் காதலை மறக்கவும் முடியாமல், அவரது வார்த்தையை ஏற்கவும் முடியாமல் திண்டாடுகிறாள் பூவிழி.

தன் இல்லற வாழ்வின் உண்மை நிலையைத் தந்தையிடம் சொல்லி, பூவிழியைக் கரம்பற்ற நினைக்கும்வேளையில் தந்தையாரின் இந்த முயற்சியை அறிந்து என்ன செய்வதெனத் தெரியாமல் திண்டாடுகிறான் பொற்செழியன்.

தான் காதலித்தவளின் பரிதவிப்பான நிலை கண்டு நாயகன் பொற்செழியனின் நிலையைச் சொல்லவே வேண்டாம். துயரக் குளத்தில் மூழ்கி எழுகின்றனர் பொற்செழியனும் பூவிழியும்.

பூவிழியின்  அன்பிற்கும் நேசத்திற்கும் சொந்தமான தோழியாய் இருக்கிறாள் பரிதி. பரிதிக்கு மட்டுமே பூவிழியின் உண்மை நிலை தெரியும் என்பதால் அவளது ஆழமான காதலை காப்பாற்ற தன்னால் முடிந்த உதவியாய், பரமானந்தத்தாரின் மூத்த மகன் பரிபூரணனைக் கரம் பற்றுகிறாள் பரிதி. போதைக்கு அடிமையான அவனை அதிலிருந்து மீட்க அவனது குடும்பத்தினரோடு சேர்ந்து தானும் போராடி மீட்டு, காதலுக்கு ஒரு காவியம் வரைகிறாள்

இதற்குள் தம்பி, தங்கைகளின் காதலுக்கான போராட்டம், அவர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்காக பொற்செழியன் எடுக்கும் முயற்சிகள், என ஒரு பாசப்போராட்டமாய் நகர்கிறது பூவிழிவாசம்.

இவற்றை எல்லாம் கடந்து பொற்செழியனும் பூவிழியும் சேர்ந்தார்களா, அவர்களின் காதல் வெற்றியடைந்ததா, என்பதே இந்நாவலின் முழுமை……

தொடரும்…

Related Articles

Leave a Reply

Back to top button