மண்வாசனை

தூரக்கனவுகளும் துயர நினைவுகளும் 3 – பிரபா அன்பு!!

story

நிலையில்லாது இவ்வுலக வாழ்வில் ஒவ்வொரு நாட்களும் நாம் எமக்கு நெருக்கமான உறவுகளை தொலைத்தும் பிரிந்தபடியும்தான் இருக்கிறோம்.

பொதுநல வாழ்விற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் 2009 ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பிற்பட்ட காலங்களில் பலவிதமான பிரச்சினைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதிலிருந்து மீள வழிதெரியாது இன்றுவரை தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிரச்சனைகளையும் துன்பங்களையும் வெளியே கூறினால் சிலரால் ஆறுதல் கிடைக்கும். சிலரிடம் கூறுகின்றபோது அதுவே பல பிரச்சனைகளிற்கு வழிகோலிவிடும் என்று நினைத்து பிரச்சனைகளை வெளியே கூறமுடியாதும் பிரச்சனைகளிற்கு தீர்வை பெறமுடியாதும் தமக்குள் வைத்து புளுங்கித் தவித்துக் கொண்டிருப்பவர்கள்தான் ஏராளம்.

தனது கொடூரமான நோயைக்கூட வெளியே கூறாது நோயிற்கு தகுந்த மருந்தெடுத்து உட்கொள்ளாது தனக்குள்ளே அழுதுகொண்டிருந்த அண்மையில் இரத்த புற்றுநோயால் இறந்த தங்கை துஷியைப் பற்றித்தான் நான் தங்களிற்கு சில விடயங்கள் கூறலாம் என்று நினைக்கிறேன்.

அந்த வகையில் 2009 ஆண்டிற்கு முற்பட்ட காலப் பகுதியில் எனக்கு கிளிநொச்சிப் பகுதியில் இருக்கும்போது அறிமுகமாகியிருந்த தங்கைதான் துஷி

அப்போது நான் அவளை காண்கின்றபோது யுத்தத்தில் இரண்டு கால்களும் இல்லாத நிலையில்தான் பார்த்திருந்தேன்.

எப்போதும் அமைதியான சுபாவமுடைய ஒருத்தியாகவே  துஷி இருந்தாள்.தான் உண்டு தன் வேலைகள் உண்டு என்று காலம் கடத்துபவள்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பிற்பட்ட இக் காலப்பகுதிகளில் எம்மவர்கள் பலர் பலவிதமான துன்பங்களை அனுவித்துக்கொண்டிருக்கிறார்கள் அதில் ஒருத்தியாக பல துன்பங்களிற்கு முகம் கொடுத்து இறுதிவரை அதிலிருந்து மீளமுடியாத நிலையில் இருந்தவள்தான் தங்கை துஷி.

இரண்டு கால்களும் இல்லாத நிலையிலும் தனது தன்னம்பிக்கையை இழக்காத துணிச்சல்காரி

யுத்தம் நிறைவுற்றதன் பிற்பாடு தம்மை நிலைப்படுத்திக்கொள்வதற்கு எம்மவர்கள் பலர் பலவிதமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

இருப்பதற்கு ஒரு வீடின்றி பலர் அலைந்தார்கள். இப்போதுவரை அலைகிறார்கள்.உறவுகளை இழந்தவர்கள் யாரிடம் தஞ்சம் அடைவோம் என்று ஏங்கி தவித்துக்கொண்டிருந்தார்கள்.

இரண்டு கால்களும் இல்லாத நிலையிலும் தாயாரையும் இழந்திருந்தவள் உறவுகளின் அரவணைப்போடு முடிந்த அளவு முயன்று தனது தேவைகளை பூர்த்தி செய்து மற்றவர்களிற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்தாள்.

இறக்கும்வரை மற்றவர்களிற்கு ஒரு முன்னுதாரனமாகவே திகழ்ந்தவள்.தன்னம்பிக்கைக்கு உதாரணமாக எடுத்துக்காட்டாகக்கூடிய ஒருத்தியாக இருந்தாள்

தான் சொந்தமாக ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று முயன்றவள் பாடசாலை மாணவர்களிற்கான புத்தகப்பைகளை மிக நேர்த்தியான முறையில் தைத்து பழகி விற்பனை செய்தாள்.

முல்லைத்தீவுப் பகுதியில்தான் இவளது தையல் நிலையம் உள்ளது.

இவளிடம் போய் புத்தகப் பைகளைத் தைத்து பழகும்படி தங்கை புரட்சி அவர்கள் அடிக்கடி என்னிடம் கூறிக்கொண்டேயிருப்பாள்

அழகாகவும் மிக வேகமாகவும் அவ்வளவு நேர்த்தியாகவும் புத்தகப் பைகளை தைத்தெடுப்பவள்.நம்பிக்கை தளராதவள். பொய்க் கால்களோடும் தனது வாழ்வாதாரத்தை சீர்ப்படுத்தியிருந்தாள்.

தனது உற்பத்திக்கு TL bag என்றே பைகளில் தைத்து விற்பனை செய்தாள்.

வாழ்க்கையில் பல துயரங்களையும் இழப்புக்களையும் சுமந்து தனியே தவித்து நின்றவளிற்கு பேரிடியான ஒரு செய்தி காத்திருந்தது.

இரத்தப் புற்றுநோயும் உடலை ஆக்கிரமித்திருப்பதை அறிந்தாள்.

ஆனால் தனக்கு ஏற்பட்ட இக் கொடிய நோயை மற்றவர்களிற்கு காட்டாது மறைத்து வெளியே சிரித்தாள்.. அனைத்து துன்பங்களையும் மனதோடு பூட்டிவைத்து மறைத்துக்கொண்டாள்.

அவளது ஒற்றைச் சிரிப்பிற்குள் அனைத்து துன்பங்களும் மறைந்திருத்தது

எங்கே தான் சோகத்தை வெளியே காட்டிக்கொண்டால் மற்றவர்கள் காரணத்தைக் கண்டு பிடித்துவிடுவார்களோ என்று நினைத்தவள் அனைவரோடும் மகிழ்வாக கதைத்துப் பழகினாள்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவளது நோயும் அதிகமாகியதோடு அவளின் உடலையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது

நோயின் தாக்கம் அதிகமாக மருத்துவமனை சென்றாள். நோயின் தாக்கம் அதிகமாகி கிருமிகள் அவள் உடலை ஆக்கிரமித்துக்கொண்டதால் அவசரமாக யாழ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவள்

தன்னை பரிசோதித்த மருத்துவரிடம் தான் இறந்துவிடுவேனா என்று கேட்டுள்ளாள்.உறவினர்களிற்கு தகவல் கூறப்பட்டு அவர்கள் வந்து சேருவதற்கு முன்பு புதுவருட தினத்தன்று இவ்வுலகை விட்டு நீங்கிச் சென்றுவிட்டாள் எங்கள் துஷி.

இரண்டு கால்களையும் இழந்த நிலையிலும் மெசினில் புத்தகப் பைகளை தைக்கும்போது அதனை வீடியோவாக எடுத்து அவளின் வியாபாரத்திற்கு ஒரு வழியிலாவது உதவுவோம் துஷியை சந்திப்போம் என்றிருந்தேன் அது முடியாமல் போய்விட்டது.

புதுவருட தினத்தில் துஷி எங்களை விட்டு நீங்கிச் சென்றுவிட்டாள் என்ற தகவலைத்தான் என்னால் கேட்க முடிந்தது.

தன் இளமை வாழ்வினை எமக்காக அர்ப்பணித்து இரண்டு கால்களையும் இழந்தபோதும் மற்றவர்களிடம் கையேந்தாது தன்னம்பிக்கையோடு உழைத்த ஒரு சிறந்த தொழில் முயற்சியாளராக இருந்த எங்கள் தங்கைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறேன்.

Related Articles

Leave a Reply

Back to top button