யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முதல்வர் திரு. எஸ். கே. எழில் வேந்தன் இன்று தனது அறுபதாவது வயதில் யாழ். மத்திய கல்லூரியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
பன்னிரண்டு ஆண்டுகள் யாழ். மத்திய கல்லூரியில் பணியாற்றிய இவர் அண்ணளவாக ஒரு மாணவன் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தை இப் படசாலையில் பணி செய்து கடந்துள்ளார். தனது சிறப்பான பணியின் மூலம் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.
இவ்வருடம் பெருந்துடுப்பாட்டப் போட்டியின் வெற்றி , கடந்த வருட உயர்தரப் பரீட்சையில் பல்வேறு துறைகளிலும் மாணவர்கள் பெற்றுக் கொண்ட பெறுபேறுகள் , பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவானமை, பாடசாலைச் செயற்பாடுகள் மற்றும் இணைபாடவிதானச் செயற்பாடுகள் என்பன இவரது நேரிய பணியின் சான்றுகளாகும்.
இவரது ஓய்வினை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் ஒன்றிணைந்து அவரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இன்று காலை உணர்வுபூர்வமாக வரவேற்று, பாடசாலையில் கேக் வெட்டி அவரது அகவைநாளைக் கொண்டாடியதுடன் பாடசாலையின் இந்து ஆலயத்தில் பூசை வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, இன்றைய தினம் ஆசிரியர், மாணவர்கள் இவரது பணி ஓய்வினை முன்னிட்டு மிகவும் சோகமான மனநிலையில் இருந்தமையை உணர முடிந்தது.
பாடசாலையின் இசை மன்றம் மற்றும் வணிக பிரிவு மாணவர்கள் ஒன்றிணைந்து இவரது ஓய்வினை முன்னிறுத்தி பாடல் ஒன்றினையும் இயற்றி இசை அமைத்து பாடியிருந்தனர்.
பின்னராக , ஆசிரியர்கள் பலர் பாடசாலை முதல்வரை வீடு வரை அழைத்துச் சென்று அவரை ஆசுவாசப்படுத்தி, கௌரவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அக் கல்லூரி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் மணிவிழா நிகழ்வு தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.