கட்டுரைசெய்திகள்புலச்செய்திகள்

பனி நிலத்தின் பாடுகள் – கோபிகை!!

Artcle

ஐவகை நிலங்கள் என்பது தமிழில் பிரசித்தமான ஒன்று.  தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நிலங்கள் அவை. இது இவ்வாறிருக்க,

பனியும் பனி சார்ந்ததுமான ஆறாம் வகை நிலம் நாடி, ஆறுதல்,  அரவணைப்பு தந்த உறவுகள்  பற்றியே இக்கட்டுரையில் பேசவுள்ளோம்.

பேரவலத்தைச் சந்தித்த தமிழ் மக்கள்,  ஆரம்ப காலம் முதல் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வாழ்வியல்
துயரமே  நீதி கேட்கவும் உரிமைக்காக உயிர் கொடுக்கவும் வைத்தது.

இந்த அவலம், துரத்திய போது, ஒரு பகுதி மக்கள் தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பனி நிலங்களுக்குப் புலம்பெயர்ந்தனர்.

பின்னர் அவர்களே, தாயக தேசத்தின் பலமாகிப்போயினர் என்பது தமிழர்களின் வாழ்வியல் நிலைப்பாடு.

ஒரு இடத்திலிருந்து பிடுங்கப்பட்டு இன்னோர் இடத்தில் நடப்பட்ட செடியைப் போல, புலம்பெயர்ந்து  வாழும் தமிழ் மக்களின் நிலைப்பாடு இருந்துள்ளது.

ஒரு நதியின் லாவகத்தோடு சொந்த மண்ணில் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கை,  தாளம் தவறிய இசையைப்போல, புலம்பெயர்ந்த நாட்களைக் கொடுத்துள்ளது.

சொந்த மண்ணின் நினைவுகளை ஞாபக இடுக்குகளில்  நிரப்பிக்கொண்டு மாதம் கடந்து வரும் மடல்களில், ஊர் உறவுகளின் அன்பின் வாசனையை முகர்ந்து தேடிய அபூர்வமான நாட்கள் புலம்பெயர் வாழ்வின் ஆரம்ப காலங்கள்.

அந்த வாழ்வோடு ஒட்டவும் முடியாமல் சொந்த நிலத்திற்கு திரும்பவும் முடியாமல் திரிசங்கு நிலையில் திணறிய காலங்கள்,  பலருக்கு இப்போது நினைத்தாலும் இந்த நினைவுகள் ஒரு அயர்ச்சியைக் கொடுப்பதுண்டு.

மாறுபட்ட பண்பாடு, மாறுபட்ட கலாசாரம், மாறுபட்ட வாழ்வியல் கோலம் என ஆரம்ப நாட்கள், அலைப்புறும் நிலையைக் கொடுத்தே கடந்திருக்கும் என்பதே யதார்த்தம்.

அவர்கள்,  அந்த கடின வாழ்வுக்குள் நிலத்தின் உறவுகளையே நித்தம் நினைக்கின்றவர்களாகவே தமது அன்றாட நாட்களை நகர்த்திக் கொண்டிருந்திருப்பர்.

உறவுகள் வாழ, ஊர் வாழ என்று நித்தம் திரியாகி உருகிய இளமை நாட்கள் எத்தனையோ பேருக்கு நினைவுகளாய்  தங்கியிருக்கும்.

புலம்பெயர் உறவுகள் தான் தமிழ் மக்களின் பலமான நம்பிக்கை.  அதனால் தான்,  “ஈழக்கனவை, புலம்பெயர் இளையோரிடம்” ஒப்படைத்துச் சென்றிருக்கிறார் எங்கள் தேசமகான்.

பனி நிலம் தான்,  வாழ்வுக்கும் வாழ்வாதாரத்திற்கும் பலருக்கு அத்திவாரமாக உள்ளது.  கொட்டும் பனி , சில நேரங்களில்,  இல்லை….இல்லை… பல நேரங்களில்,  தாய் மண்ணை நோக்கி,  தாகத்தோடு  ஓடவைப்பதாகவும் புழுதி மண்ணின் ஆசுவாசங்களே மீண்டும் பனி நிலத்தை எதிர்கொள்ள வைக்கிறது எனவும் பல புலம்பெயர் உறவுகளின் வாய்மூல வாக்குமூலங்கள் சொல்லுகின்றன.

கைகால்கள் விறைத்து உதடுகள் வெடித்து,  மரத்துப்போன சரீரம், சோர்வுகொண்டாலும், மனங்கள்  எண்ணிக்கொண்டிருப்பதென்னவோ நிலத்தின் உறவுகளைத்தான் என்பது  நிதர்சனமான ஒன்று.

காலம், சில மனநிலை மாற்றங்களைச் சிலருக்கு கொடுத்து விட்டாலும்  “வங்குரோத்தான இலங்கையின் பொருளாதாரச் சரிவை , புலம்பெயர் உறவுகள் நினைத்தால் சில நாட்களில் தூக்கி நிமிர்த்தி விடுவார்கள்” என்ற வார்த்தைகள்
புண்ணுக்கு மருந்து தடவியது போல, தமிழர் மனங்களை இதப்படுத்தியது என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

அழகான, பஞ்சுக் குவியல் போன்ற,  பனித்துகள்களில் எங்கள் உறவுகளின் கழுவேற்றப்பட்ட கனவுகளும் கானல் தேசத்தின் நினைவுகளும் தான் ஒட்டியிருக்கிறது என்பது நாங்கள் அறியாததல்ல…

ஒரு வரலாறு எழுதப்படுவதற்கு, இங்கு குருதி சிந்தியது, அப்போது, பனி நிலத்தின் உறவுகளுக்கு உயிர் உருகி ஓடியது என்பது மறுக்க முடியாத உண்மை. 

பனி நிலத்தின் மீது, இன்னும் இன்னும் எங்கள் நம்பிக்கை ஓயாமல் நீண்டு
கொண்டிருக்கிறது.

நேற்று இன்று நாளைகளைக் கடந்து சமூக மாற்றத்திற்கான சத்தியத்தில் ஒன்றாவோம் நாம்.

கோபிகை.

Related Articles

Leave a Reply

Back to top button