இது ஒரு உண்மை சம்பவம், …
அந்த கேஸ் ஸ்டேஷன் வாசலில் அவன் குந்திக்கொண்டு இருந்தான். வாரப்படாத தலைமுடி, அழுக்கு பிடித்த ஹூடி , டெனிம் ஜீன்ஸ் , சவரம் செய்யப்படாத தூக்கம் இல்லாத முகம், பக்கத்தில் ஸ்கேட்டிங் போர்ட் . எல்லோரும் ஒரு பார்வை பார்த்து விட்டுப் போனார்கள். ஏதாவது தூள் அடிச்சிருக்கும் என்கிற மாதிரி. நானும் நுழையும் போது கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வுடன் தான் உள்ளிட்டேன்.
ஆள் பாதி ஆடை பாதி என்பது மற்றவர்களின் பார்வை எம் மீது விழும் போது அவர்கள் கொடுக்கும் மரியாதை பல நேரங்களில் எங்கள் ஆடையை , நாகரீகத்தை பொறுத்து தான் என்பதை நானறிவேன்.
நல்ல அழகான ஆடைகளுக்குள் திருடரும், ஏமாற்றுக்காரரும் இருப்பது போல, இந்த கசங்கிப் போன ஆடைகளுக்குள் எத்தனையோ அற்புதமான மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
உள்ளே போன நான் ஆர்டர் எடுக்கத் தொடங்கிய போது அந்த நபர் வெளியே இருந்து மெதுவாக எட்டி உள்ளே பார்த்தார், அடுத்த கணம் அவர் கீழே மீண்டும் அமர்ந்து விட்டார். எனக்கு மனசு எதோ மாதிரி தோன்ற போய் எட்டி பார்த்தேன். எதுவும் உதவி தேவையா என்று? “உங்களுக்கு ஏதும் தேவையா என்று கேட்ட போது என் ஸ்கேட்டிங் போர்டு வைக்க ஓர் இடம் வேண்டும் என்றார்.
நான் அவரைப் பார்த்தேன்,
எதற்கு? என்பது போல,
அவர் மௌனமாக நின்றார். “நீங்க எங்கே இருக்கின்றீர்கள்” என்றேன் . நான் இங்கு இருப்பவன் அல்ல, நான் இருக்கும் இடம் என்று எங்கள் இருப்பிடத்தில் இருந்து 100km அப்பால் ஒரு இடத்தைச் சொன்னார். “எதற்காக இங்கு வந்தீர்கள்” என்று கேட்ட போது , அந்த வாடிய முகம் இன்னும் கொஞ்சம் சோகத்தில் சோர்ந்து போனது. அவர் பேசும் மட்டும் காத்திருந்தேன்.
என் மகனை வான்கூவர் BC Children ஹோஸ்பிடலில் தீவிர சிகிச்சைப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக வைத்திருக்கிறார்கள். அவன் ஒரு உயர்ந்த சுவரில் ஏறிய போது சறுக்கி விழுந்து விட்டான். அவன் தலை பின்புறம் அடிபட்டு சுவாதீனம் இல்லாமல் இருக்கிறான். அவர்கள் என்னை அங்கு அருகில் இருந்து அவனை பராமரிக்க , பார்க்க அனுமதிக்கிறார்கள் இல்லை, எதாவது முக்கியமான தேவைகளுக்கு மட்டும் என்னை நுழைய அனுமதிக்கிறார்கள். அதனால் நான் இப்படி வீதி வீதியாக அலைகிறேன். வீட்டுக்கு போய் வர கூடிய வசதி என்னிடம் இல்லை. போனால் இவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கு. அதனால் தான் வெளி வாசலில் படுகிறேன், ஹாஸ்பிடல் சுற்றாடலில் சுத்தி சுத்தி பைத்தியம் பிடிக்காத குறை. ஒவ்வொரு முறையும் உள்ளே போக ஏதாவது ஒரு காரணம் தேடிக்கொண்டு இருக்கிறேன். அவர் பேச பேச என் தொடைக்குள் என்னையும் மீறி இறுக்கம் ஒன்று தோன்றியது. நேற்று ஒன்று இரண்டு முறை பார்க்க சில Get well soon card நானே வாங்கி எழுதி, உறவினர் கொடுத்தார்கள் என்று பொய் சொல்லிக் கொண்டு போக ஒவ்வொரு சாக்கு தேடிக் கொண்டேன்.
எனக்கு அம்மா எங்கே என்று கேட்க தோன்றவில்லை , அது அவசியமில்லை அந்த தந்தை அம்மாவாக அங்கே நிற்கும் போது அம்மாவின் தேவை எதற்கு. அன்பான அப்பாக்கள் நிறையவே உண்டு. தங்கள் உயிரை கொடுத்து பிள்ளைகளை மீட்க கடவுள் போல, என்ன, எங்கள் கண்களுக்கு தான் தெரியவில்லை. சரி ஏதாவது உதவி தேவை என்றால் கேளுங்கள் என்று உள்ளே வந்தேன். நான் திரும்பி போகலாம் எனும் போது நான் இந்த ஸ்கேட்டிங் போர்டு இங்கே வைக்கலாமா என்றார். சரி என்றது ஒரு இடத்தில் நிமிர்த்தி வைத்தார் .
நான் காரில் ஏறும் போது கையில் ஒரு பூங்கொத்து உடன் ஓடி வந்தார் , என் மகனைப் பார்க்கப் போகிறேன் என்று மகிழ்ச்சியில். கூவினார்.
“இந்தப் பூங்கொத்தைக் காட்டி வாழ்செய்யப்போகிறேன்” என்றபடி உற்சாகமாகப் போய் ஸ்கேட்டிங் போர்டில் ஓடிக்கொண்டு இருந்தார்.
பொங்கி வந்த கண்ணீரை எனக்குள் அடக்கிக் கொண்டேன்.
பாமா இதயகுமார்