இலங்கைசெய்திகள்

ஜனவரி 31 முதல் பெப்ரவரி 5 வரை மூன்றாவது தடுப்பூசி வழங்கல் வாரம் – வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!!

vaccine

செய்தியாளர் – சுடர்

கொரோனாவுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசி வழங்கல் வாரமாக ஜனவரி 31ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 5ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில்,

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் கார்த்திகை மாதம் முதல் மூன்றாவது தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கொரோனா நோயிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவது மட்டுமல்லாது தடுப்பூசியை காலக்கிரமத்தில் பெற்றுக்கொள்வதும் அவசியமாகும். எனினும், கவலைக்கிடமான வகையில் யாழ். மாவட்டத்தில் மூன்றாவது மேலதிக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இதுவரை யாழ். மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் 30.59 வீதமானவர்கள் மட்டுமே தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

தொற்று நோயியலாளர்களின் அறிக்கைகளின்படி கொரோனா வைரஸின் காலத்துடன் ஏற்படும் டெல்டா, ஒமிக்ரோன் போன்ற திரிபுகளைத் தடுப்பதற்கும் இந்தப் பெருந்தொற்று நிலவும் காலத்தைக் குறைப்பதற்கும் கொரோனாத் தொற்றால் ஏற்படும் கடுமையான நோய் நிலையைத் தடுப்பதற்கும் மற்றும் மரணங்களைக் குறைப்பதற்கும் தடுப்பூசிகளை உரிய காலக்கிரமத்தில் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

உலக சுகாதார அமைப்பின் அண்மைய ஆய்வின்படி இரண்டாவது கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட தினத்திலிருந்து ஆறு மாதங்களின் பின்னர் தடுப்பூசியின் வினைத்திறனானது குறைவடையும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வயது வந்தவர்களுக்கு ஏனையோரைவிட இந்த வினைத்திறனானது சற்று அதிகமாகவே குறைவடையும் என்பதும் முக்கியமான விடயமாகும்.

எனவே, தற்போது ஏற்பட்டு வரும் கொரோனா திரிபுகளை எதிர்கொள்ள வேண்டுமாயின் இந்த மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியமானதாகும். மக்கள் தொகையில் குறைந்தது 70 வீதமானோர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே நாட்டில் கொரோனாப் பெருந்தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். அதன் மூலமே தடுப்பூசி போடுவதற்கு விருப்பமிருந்தும் உடல் நோய் நிலைமைகளால் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களையும் பாதுகாக்க முடியும்.

அவ்வாறு மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதால் ஏற்படப்போகும் கொரோனாப் பெருந்தொற்றால் மிகப்பெரும் எண்ணிக்கையானவர்கள் தொற்றுக்குள்ளாவதுடன் அதிக எண்ணிக்கையான மரணங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.

எனவே, கொரோனாயஜ் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு எமது உடலில் கொரோனாத் தடுப்பூசியின் வினைத்திறனானது உயர்வாகக் காணப்பட வேண்டும். எனவே, காலத்துடன் குறைவடைந்து செல்லும் கொரோனாத் தடுப்பூசியின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு மூன்றாவது தடவையாகக் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

அண்மைக்காலமாக மீண்டும் நாடளாவிய மற்றும் மாகாண ரீதியில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றுக்காரணமாக அனுமதிக்கப்படபவர்களின் எண்ணிக்கையும் சிகிச்சையின்போது செயற்கை ஒட்சிசன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதும் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் பெருந்தொற்று அபாயத்தின் அறிகுறிகளாகும்.

எனவே, யாழ். மாவட்டத்தில் ஜனவரி மாதம் 31ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி வரை தடுப்பூசி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாட்களில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அதாவது 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்கனவே சினோபார்ம் தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் அனைவருக்கும் மேலதிகமாக மூன்றாவது தடவையாக கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பவு ள்ளது.

இந்தத் தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து ஆகக்குறைந்து மூன்று மாத இடைவெளியின் பின் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் தடுப்பூசி வாரத்தின்போது தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் பற்றிய விபரங்கள் அந்தந்தப் பிரதேசங்களுக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளால் அறியத்தரப்படும்.

கொரோனாவுக்காக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் தமது தடுப்பூசி அட்டையைச் சமர்ப்பித்து தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை தடுப்பூசி வழங்குவதற்கு யாழ். மாவட்டத்தில் யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறான நிலைமைகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியைப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொள்ள முடியும்” – என்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button