பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுஇ எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான
வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பாகிஸ்தானில் நேற்று துன்பகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையர் ஒருவர் அடித்து – துன்புறுத்தப்பட்டு – எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதற்காக இலங்கை அரசும் முழுமையாகப் போராட வேண்டும்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நூறு பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதி நிலைநாட்டப்படும் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. அதேபோல் இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கான கோரிக்கையை நாம் இன்னும் விடுக்கவில்லை. அவ்வாறு விடுத்தால் நிச்சயம் சந்திப்புக்கான வாய்ப்பு கிடைக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா செல்லவுள்ளது. அவர்கள் முதலில் சென்று வரட்டும்” – என்றார்.
செய்தியாளர் சுடர்