செய்தியாளர் –
ஏ.ஜே.எம்.சாலி, திருகோணமலை
திருகோணமலை நகரின் வடக்கே 40 கிலோ மீட்டருக்கு அப்பால் கரையோரமாய் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செந்தூர் கிராம சேவகர் பிரிவில் அமையப் பெற்றுள்ள முஸ்லிம் குடிமனைகளைக் கொண்ட கிராமமே புடவைக்கட்டாகும்.
1950 ஆண்டு உருவாக்கப்பட்டு 72 வருட வரலாற்றைக் கொண்ட பழமை வாய்ந்த இக்கிராமத்தில் மூவினத்தவர்களைச் சேர்ந்த 450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வாழுகின்றனர். மீன்பிடித்தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக்கொண்டுள்ள இக்கிராமம் கடந்த கால யுத்தம் சுனாமியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புல்மோட்டை கனிய மணல் தொழிற்சாலைக்கும் திரியாய் குச்சவெளி கிராமத்திற்கு மிக அண்மையிலுள்ள இக்கிராமத்தின் கடற்கரையோரங்களில் இல்மனைட் படிவுகள் இருப்பதாக கூறி அவற்றை அகழ்வு செய்ய அனுமதி தருமாறு கனிய மணல் கூட்டுத்தாபன உயரதிகாரிகள் இங்குள்ள பொது அமைப்புகளோடு 2012 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை செய்துஉடன்படிக்கையும் செய்து கொண்டு கனியமண் அகழ்வை மேற்கொண்டனர்.ஆனால் அவர்கள் செய்து கொண்ட உடன்படிக்கைகளில் குறிப்பிட்ட ஒன்றையும் இது வரை நிறைவேற்றவில்லையென பிரதேச சபை உறுப்பினர் றிஸாத் ( இம்ஜாத் )தெரிவித்தார்.
கடற்கரையிலிருந்து 100 மீட்டருக்குட்பட்ட சில தனியார் காணிகளில் 3அடி வரை மண் அகழ்வதாக கூறி கூறிக்கொண்டு தற்பொழுது 20 அடி வரை மண் அகழ்வை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே அகழ்வை மேற்கொண்ட ஆழமான பகுதிகளை உரிய முறையில் மண்போட்டு மீள்நிரப்படாததால்.தற்போது இவ்விடங்கள் தாழ்நிலப்பகுதிகளாக மாறிவருகிறது. இங்கு கனத்த மழை பெய்து வருவதால் தோண்டி எடுக்கப்பட்ட ஆழமான குழிகளில் நீர் நிரம்பி வழிகிறது எதிர்காலத்தில் சில அனர்த்தங்கள் நிகழ்வதற்கு இது ஏதுவாகிவிடும் எனவே குடியிருப்பை பாதிக்கும் மேற்படி மண் அகழ்வை நிறுத்தக் கோருகின்றனர் பொதுமக்கள்.