இளைஞர் யுவதிகளான இளந் தலைவர்களுக்கு முரண்பாட்டு நிலைமாற்றத்துக்கான பன்மைத்துவ செயற்பாடு எனும் பயிற்சி நெறி மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தனியார் விடுதியில் திங்கள்கிழமை 21.02.2022 இடம்பெற்றது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதக் குழு இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த வேறுபட்ட இளைஞர் அமைப்புக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 40 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
இனவாத அடிப்படையிலான வன்முறைகளைத் தவிர்த்தல், வெறுப்புப் பேச்சு, அஹிம்சை வழிச் செயற்பாடுகள் உள்ளிட்ட தொனிப் பொருள்களில் விளக்கவுரைகளும் செயன்முறைப் பயிற்சிகளும் இங்கு இடம்பெற்றன.
பயிற்சி நெறியில் வளவாளர்களாக பி. பெனிகஸ் மற்றும் ரீ. சில்வயன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
பழமை வாதத்தையும், வன்முறை சார்ந்த மனப்பாங்குகளையும் தவிர்த்துக் கொண்டு புதிய போக்கில் இயல்பான வாழ்க்கை முறையினூடாக சமாதான சகவாழ்வைக் கட்டியெழுப்புவதன் அவசியம் இந்தப் பயிற்சி நெயினூடாக வலியுறுத்தப்பட்டது.
பயிற்சி நெறியில் பங்குபற்றிய தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் முற்றிலும் சமாதான சகவாழ்வுக்கான புதிய போக்கில் தமது சிந்தனைக் கருத்துக்களை வெளிப்படுத்தியதாக பயிற்சியளித்த வளவாளர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதக் குழு உதவி இணைப்பாளர் எம்.ஐ. அப்துல்ஹமீட் உட்பட இளைஞர் யுவதிகளின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் – சக்தி