செய்தியாளர் – சுடர்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கட்டாயம் நாம் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-
“நாம் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தைக் கோரும் தரப்புகளுக்கே பிரச்சனையாக இருக்கும். நாம் மாகாண சபையைக் கைப்பற்றி, அந்த வெற்றுக்கோஷத்தை அம்பலப்படுத்தி விடுவோம் என்று அவர்கள் அஞ்சுகின்றார்கள். அதனால் கட்டாயம் நாம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
கடந்த முறை முன்னாள் ஆஜர் அமரர் இராஜப்பு யோசப் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, இதிலுள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தி, இதைத் தாண்டி அரசியலைக் கொண்டு செல்லச் செயற்படுவோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாக்குறுதியளித்தனர். மக்களைப் பகிஷ்கரிக்க அழைப்புவிட வேண்டாம் என்றார்கள். அதை நம்பினோம். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை.
ஓர் அதிகாரமுமில்லாத ஒன்றை தமிழ் மக்களிடம் திணித்து, வரப்போகின்ற அரசமைப்பில் 13ஆவது திருத்தம் உள்ளது எனக் கூறி மக்களை ஆதரிக்க வைக்கும் முயற்சியை முறியடிக்க நாம் போட்டியிட வேண்டும்.
நாம் 13ஆவது திருத்தத்தை நிராகரிக்கின்றோம். உண்மையில் எமக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. கடந்த தேர்தலை எமது கட்சி பகிஷ்கரித்தது. ஆனால், மக்களைப் பகிஷ்கரிக்கக் கோரவில்லை. மாகாண சபை முறைமையின் அதிகாரமற்ற தன்மையை அம்பலப்படுத்தாமல், அதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குக் கூட்டமைப்பு சென்றுள்ளதால், மாகாண சபை முறைமையை அம்பலப்படுத்தும் பொறுப்பை நாமே ஏற்க வேண்டும்” – என்றார்.