கல்விசெய்திகள்

மிகச் சிறப்பாக இடம்பெற்ற வரலாறு பாட கருத்தரங்கு – பல எதிர்பார்க்கை.வினாக்களை உறுதியாக கோடிட்டுக் காட்டிய ஆசிரியர் ஆதி!

Seminar

 ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும்  சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான நேரடி கருத்தரங்கு கடந்த வெள்ளிக்கிழமை.  ( 07.05.2023) மட்டுவில் தெற்கு வளர்மதி கல்வி கழகத்தில் ஆரம்பமானது.

 வரலாறு பாட ஆசிரியர் ஆதி அவர்கள் மிகச் சிறப்பான முறையிலே தனது வழிகாட்டலை நடத்தியிருந்தார். அன்றைய தினம் தொடக்க நாள் என்பதனால் ஆரம்பத்தில் சிறு அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

வளர்மதி கல்விக் கழக பொறுப்பாசிரியர்  ச. கிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில்,  பிரணவன் அறக்கட்டளையின் சார்பாக அவ் அமைப்பினரின் உறவினரான திருமதி.  சகிலா மற்றும் நித்தி ஆகியோர் மங்கள விளக்கினை  ஏற்றி நிகழ்வை ஆரம்பித்துவைக்க திரு. ச. கிருஷ்ணன் தலைமை  உரையையும் ஐவின்ஸ் தமிழ் உரிமையாளரும் கல்விப் பகுதி  பொறுப்பாசிரியரும் யாழ்.  மத்திய கல்லூரி ஆசிரியருமான திரு. இ. ஜனதன்  கருத்தரங்கு தொடர்பான விளக்க உரையையும் வழங்கிவைத்தனர்.

தொடர்ந்து வாழ்த்துரையினை  வலிகாமம்  கல்வி வலய பிரதிக்கல்விப்  பணிப்பாளர் சி. மதியழகன் வழங்கிவைத்தார். 

மாலை 5. 30 மணியளவில் ஆரம்பமான ஆசிரியர் ஆதி அவர்களின் கருத்தரங்கு தொய்வற்ற நிலையில் மாணவர்களின் பூரண ஒத்துழைப்புடன் 9.00 மணிவரை தொடர்ந்தது. 

பல பிரயோசனமான விஷயங்களையும் பரீட்சை தொடர்பான எதிர்பார்ப்பு வினாக்களையும்  பரீட்சைககு இலகுவாக விடையளிக்கும் முறைகள்  பற்றியும் அவர் தெளிவாக விளக்கமளித்திருந்தார்.

மிகக் குறிப்பாக,  இவர் உளவியல் பட்டதாரி என்பதால் மாணவர்களுக்கு சுய நம்பிக்கையைக் கொடுத்து பரீட்சை பற்றிய தெளிவையும்  வழங்கியிருந்தார்.

தன்னுடைய வினாத்தாள் மற்றும் விளக்க குறிப்புகளை மீட்டல்  செய்வதன் மூலம் வரலாறு பாடத்தில் சிறந்த பெறுபேறுகளைப்  பெறமுடியும் எனவும்  அதற்கு காரணம்,  இதுவரை தெரிவு செய்யப்படாத புதிய வினாக்களையே  தான், பயிற்சி  வினாத்தாளில் தெரிவுசெய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

 மட்டுவில் கிராம மாணவர்கள் மட்டுமன்றி மட்டுவிலை  அண்டிய அயல் கிராமங்களான கல்வயல் , சாவகச்சேரி மாணவர்களும் இதன் மூலம் பயன்பெற்றனர் என்பதுடன் துல்லியமான படப்பிடிப்பின் மூலம் மட்டுவில் வளர்மதி யூரியூப் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்ற வழி செய்யப்பட்டது. இதனால், மாணவர்கள் பயன் பெற்றதுடன் பயன் பெற்றுக்கொண்டும் உள்ளனர்.

பல பெற்றோர்கள் ஐவின்ஸ் தமிழ் மற்றும் வளர்மதி கல்விக் கழகத்திற்கு தமது நன்றியையும் வாழ்த்தினையும் தெரிவித்திருந்தனர்.

மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் செந்தூரான என்பவர் தனது மகனின் மூன்றாவது பிறந்த தினத்தை முன்னிட்டு , கல்வியே வறுமை தணிக்கும் ஆயுதம் என்ற எண்ணப்பாட்டிற்கு அமைய பிரணவன் அறக்கட்டளை ஊடாக கருத்தரங்கிதற்கான நிதி உதவியை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எதிர்வரும் 08.05.2023 திங்கள் கிழமை நடைபெறவுள்ள தமிழ் பாட கருத்தரங்கிலும்  அநேக மாணவர்கள் பங்கு பற்றி பயன் பெற வேண்டும் என ஐவின்ஸ் தமிழ்இணைய தளம் மற்றும் வளர்மதி கல்விக் கழக சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button