இலங்கைசெய்திகள்

வன்னியில் தங்கத்தை தேடிய அமைச்சர்களின் செயலாளர்கள்!!

sarath veerasekara

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – சுதந்திரபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுப்பதற்கு முன்னதாக எடுக்க முயற்சித்த இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் செயலாளர்கள் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர்களே இவ்வாறு செயற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலை புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை முல்லைத்தீவு நீதிவானின் உத்தரவிற்கு அமைய கடந்த 25ஆம் திகதி தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், மாவீரர் தின நிகழ்வுகளினால் அந்த நடவடிக்கை நாளைய தினம் வரையில் பிற்போடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், குறித்த அமைச்சர்களின் செயலாளர்கள் குறித்த தங்கத்தை முன்கூட்டியே தோண்டி எடுப்பதற்கு முயற்சித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உடன் அமுலாகும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் இணைப்பு செயலாளர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button