இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் – சாணக்கியன் கண்டனம்!!

sanakkiyan

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “முல்லைத்தீவு  முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில்  ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது கடந்த 27ஆம் திகதி இராணுவத்தினர்  மிலேச்சத்தனமான முறையில் திட்டமிட்ட வகையில்  தாக்குதல்  மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முள்ளியவாய்க்கால் கிழக்கில் வசித்து வரும் குறித்த ஊடகவியலாளர் கடந்த 27ஆம் திகதி செய்தி சேகரிப்பிற்காக முல்லைத்தீவு சென்று அங்கிருந்து வீடு திரும்பிய நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பெயர் பலகையினை ஒளிப்படம் எடுத்த நிலையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட நான்கு இராணுவத்தினர் ஊடகவியலாளரை கேள்வி கேட்டு அடையாளப்படுத்த சொல்லி கோரிய வேளை குறித்த ஊடகவியலாளர் அடையாள அட்டையினை எடுத்து காட்ட முற்பட்ட வேளையில் படையினர் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய படையினர்  இராணுவ சீருடையிலும் கடமை அல்லாத நேரத்தில் இராணுவம் அணியும், இராணுவ சீருடையான அரை காச்சட்டையுடனும் ரி சேட்டுடனும்  நின்று  தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட  இடத்தில்   இராணுவம் தாக்குதலுக்காக பயன்படுத்திய பச்சை பனை மட்டை   ஒன்றில் முள்ளு கம்பிகள் சுற்றப்பட்ட  ஆயுதம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று இராணுவத்தினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதுடன், பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது வெரும் கண்துடைப்பு கைதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்களை பார்கின்ற போது, எம்முள் அச்ச உணர்வு ஒன்று தோன்றுவதுடன், நாடு இராணுவ மயமாக்கலினை நோக்கி நகர்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இதனை கூட்டமைப்பு என்ற வகையில் பலமுறை உரக்கச்சொல்லியிருக்கின்றோம்.

இதுகுறித்து இராணுவத்தளபதி மற்றும் அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் மௌனம் காக்கின்றமை வருத்தமளிக்கின்றது. குறித்த இருவரும் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

தற்போதைய அரசாங்கத்தின் கடந்த ஆட்சிக்காலத்தின் போதும் மிக மோசமான ஊடக அடக்குமுறைகள், ஊடகவியலாளர்களைக கடத்திப் படுகொலை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்தநிலையில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட மாட்டார்கள் என கூறி தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும் தற்போதைய அரசாங்கத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

குறிப்பாக பிழைகளை சுட்டிக்காட்டுகின்ற ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

எமது மக்களுக்கும் சுகந்திரமில்லை ஊடகவியலாளர்களுக்கும் சுகந்திரம் இல்லை. சுகந்திர ஊடக முடக்கமானது ஒரு நாட்டின் முடக்கத்துக்கு ஒப்பானது. அரச சார்பான தமிழ் அரசியல்வாதிகள் இவ் அரசின் இவ்வாறான செயல்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதும் பக்கச் சார்பாக செயல்படுவதும் அவர்களுக்கு சார்பாக செயல்பாடுகளை சரி எனவும் நிறுவிக்கொண்டுள்ளார்கள்.

இந்த அரசின் காலத்திலேயே எம் மக்கள் பல இன்னல்லகளை அதிகளவாக அனுபவித்தனர் அனுபவித்துக்கொண்டும் வருகின்றனர்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button