மகாகவிபாரதி பிறந்தநாள் – டிசம்பர்_11
ரதி போன்ற அழகிய பாடல்கள்
இயற்றியதால் அவன் பாரதி
அவன் ‘ ஞான ரதம் ‘ ஓட்டிய
சாரதி
வறுமையால் பக்கத்து
வீட்டுகளில் எல்லாம்
கடன் வாங்கி செல்லம்மா
சேர்த்து வைத்தாள் குருணை
அதை எங்கிருந்தோ பறந்து
தன் வீட்டிற்கு வரும்
பறவைகளுக்கு
இரை ஆக்கியது பாரதியின் கருணை
சமூக அவலங்களைக் கண்டு
பொறுப்பதில்லை அவன் நெஞ்சு
அவன் ஆங்கிலேயரின்
ஆட்சிக் காட்டைப்
பற்ற வைத்த அக்கினிக் குஞ்சு
காட்டு அரசை ( சிங்கம் )
விலங்குகள் பூங்காவில்
கட்டி அணைத்த கவி அரசு
எப்போதும்
அன்பென்றே கொட்டும்
அவன் கவி முரசு
அவனது மீசை வெறும் மயிரல்ல
முறுக்கி முறுக்கி
நீவி நீவி அவன் வளர்த்த
தமிழ் பயிர்
முதலில் முளைத்த பயிர்
பாரதிதாசன்
திறனில் குருவை மிஞ்ச வேண்டும்
என்று பாரதிதாசன் அகத்தில்
அதிகம் வைத்தான் ஆசையை
திமிரில் தன் குருவை
மிஞ்ச ஆளில்லை என்பதை அறிந்து
முகத்தில் குறைத்து வைத்தான் மீசையை
கற்பு நிலையை இரு பாலருக்கும்
பொதுவில் வைத்த சீர்திருத்தக் கீற்று
கழுதையையும் தூக்கிக் கொண்டு
கடையத்தில் உலாவிய ஜீவகாருண்ய ஊற்று
பெண்கள் தொடக் கூடாது ஏட்டை
என்ற சொல்லுக்கு எதிராகச்
சுழற்றினான் சாட்டை
நாடு விடுதலை பெறவே
அவிழ்த்து விட்டான்
ஆனந்த பள்ளுப் பாட்டை
‘ இந்தியா ‘ பத்திரிக்கையை
நடத்திய இதழாளன்
தலையில் முண்டாசு கட்டிய
பிறை நுதலாளன்
தன்மானத் தமிழன்
தமிழத் தாயின் புதல்வன்
புரட்சிப் புலவன்
எனவேதான் எப்போதும்
எருமை ஏறி வரும் காலனும்
பாரதியைப் பார்க்க
யானை ஏறி வந்தான்
வந்த காலனை
எட்டி மிதித்து விட்டு
இன்றும் வாழ்கிறான் பாரதி
தனது கவிதைகளால்…