கதைமுத்தமிழ் அரங்கம்.

எது சொர்க்கம்!!

Which is heaven

காட்டிலே வாழ்ந்து வந்த குள்ளநரிக்குக் காட்டு வாழ்க்கை போரடித்துப் போய்விட்டது. காட்டுக்கு வெளியே உள்ள நாடு நகரங்களைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டது. இது பற்றி யாரை விசாரிக்கலாம் என யோசனை செய்தது? உடன் அதன் நினைவுக்கு வந்தது செங்கால் நாரைதான்.

நாரை காட்டை விட்டு வெளியோறி மாலையில் இரையோடு வருவதைப் பலமுறை பார்த்துள்ளது. எனவே நாரை தங்கியுள்ள மரத்துக்கு ஓடியது.

“நாரையண்ணே! நாரையண்ணே!” என்று குரல் கொடுத்தது.

நாரை மரத்தில் இருந்து கிழே இறங்கி வந்து, “என்ன குள்ளநரியாரே, இவ்வளவு தூரம் என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டது.

“நாரையண்ணே! எனக்குக் காட்டு வாழ்க்கை வெறுத்து விட்டது. நாடு, நகரங்களைச் சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். நீதான் எனக்கு யோசனை சொல்ல வேண்டும்” என்றது.

“குள்ளநரியாரே! நான் இரைதேடி நெடுந்தொலைவு போகிறேன் என்றால் அது இறைவன் எனக்கு இட்ட விதி. உனக்குத்தான் காட்டிலேயே எல்லாம் கிடைக்கிறதே. நீ ஏன் காட்டைவிட்டு வெளியேற ஆசைப்படுகிறாய்? அது ஆபத்தில்தான் முடியும்” என்றது செங்கால் நாரை.

“உனக்குச் சொல்ல விருப்பமில்லை என்றால் விட்டுவிடு நாரையாரே” என்று சொல்லிக் கோபத்துடன் திரும்பியது குள்ளநரி.

“நான் உன் நல்லதுக்குத்தான் சொன்னேன். கோபித்துக் கொள்ளாதே. நாடு, நகரங்களில் மனிதர்கள், அவர்களுடன் ஆடு, மாடு, குதிரை, நாய், கோழி போன்ற சில விலங்குகளும் வாழ்கின்றன” என்றது நாரை.

“ரொம்ப நன்றியண்ணே!” என்றபடியே சந்தோஷமாக ஓடியது குள்ளநரி. வழியில் தனது நண்பனான கரடியைப் பார்த்தது நரி.

நடந்ததைக் கூறிக் கரடியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு காட்டை விட்டு வெளியேறியது.

நகர எல்லைக்குள் நரியும் கரடியும் வந்தன. அங்கே ஒரு சலவைத் தொழிலாளி ஆற்றில் துணிகளைத் துவைத்து மணலில் காய வைத்துவிட்டுக் குளித்துக் கொண்டிருந்தான்.

குள்ளநரியும் கரடியும் அவசரமாக ஓடி, ஆளுக்கு ஒரு பேண்ட், சட்டை என எடுத்து அணிந்து கொண்டு மனிதர்களைப் போலவே நடந்து சென்றன.

வழியிலேச் சிறுவர்கள் கழுதை வாலில் தகர டின்னைக் கட்டிக் கழுதையை விரட்டிச் செல்வதைக் கண்டு இரண்டும் வருந்தின.

அளவுக்கு அதிகமாக பாரம் இழுக்க முடியாமல் காளை மாடுகள் சாலையில் விழுந்து கிடப்பதைக் கண்டன.

கண் எதிரிலேயே ஆடுகளைத் தோல் உரிப்பதைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறின.

பொழுது சாய்ந்து இரவாகியது.

மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதைக் கண்டு குள்ளநரியும் கரடியும் அவர்கள் பின்னே சென்றன.

ஒரு கூடாரத்தினுள் எல்லோரும் நுழைந்தனர். நரியும் கரடியும் அதற்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்தன. அங்கிருந்த சேரில் உட்கார்ந்தன. அது ஒரு சர்க்கஸ் கூடாரம்.

கோமாளி ஒருவன் உள்ளே வந்து வேடிக்கை காட்டியதைக் கண்டு குள்ளநரியும் கரடியும் சிரித்தன.

அடுத்து மூன்று குதிரைகள் வேகமாக ஒடிவந்தன. அவற்றை சாட்டையால் அடித்தப்படியே பின்னால் ஒருவன் ஒடிவந்தான். குழந்தைகளும் பெரியவர்களும் சிரித்தனர்.

குள்ளநரியும் கரடியுமோ துடித்தன. ஐயோ இவை நம்மோடு வசித்த மிருகங்கள் ஆயிற்றே என்று கண்ணீர் சிந்தின.

யானை ஒன்று சோகமாக உள்ளே வந்து கண்ணீர் விட்டு அழுதபடியே ஒரு ஸ்டூலில் ஏறி இரண்டு கால்களையும் மேல் நோக்கித் தூக்கியபடி அமர்ந்தது. சிங்கம் ஒன்று கண்ணீர் சிந்தியபடியே ஒரு ஸ்டூல் மீது நான்கு கால்களையும் நெருக்கியபடி நின்றது.

ஐயோ! காட்டுக்கே ராஜாவான உனக்கா இந்த கதி என்று கரடியும் நரியும் பரிதாபப்பட்டன.

கரடி ஒன்று சைக்கிளை ஓட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தது. மூன்று முறை சர்க்கஸ் கூடாரத்தினுள் வட்டமடித்தது. நான்காவது முறை வட்டமடிக்கும் போது தனது இனத்தைச் சேர்ந்த கரடி ஒன்று மாறுவேடத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து விட்டது. சோகம் தாளவில்லை. ‘ஊ’ என்று ஊளையிட்டபடி கதறி அழுதது.

கரடி கதறுவதைக் கண்ட நரியும், கரடியும் தாங்கள் மாறுவேடத்தில் இருப்பதையும் மறந்து போயின. இரண்டும் ‘ஊ’ என ஊளையிட்டு அழுதன. சர்க்கஸ் கூடாரம் களேபரமாகிவிட்டது.

கூடாரத்தினுள் ஏதோ புது மிருகம் வந்துவிட்டது எனப் பயந்து எல்லோரும் ஓட… சிலர் கையில் கிடைத்த தடியுடனும் இரும்புக் கம்பியுடனும் குள்ளநரியையும் கரடியையும் துரத்தினர்.

உயிர் பிழைத்தால் போதும் என்று இரண்டும் காட்டை நோக்கி ஓடின.

நமக்கு என்றும் சொர்க்கம் நமது காடுதான் என்று சொல்லிக்கொண்டு காட்டுக்குள் ஓடி மறைந்தன.

Related Articles

Leave a Reply

Back to top button