நாட்டின் இஸ்லாமிய அடையாளத்தை இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் சேதப்படுத்துகிறது என பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன், இம்ரான் அரசாங்கம் கடலில் மூழ்கும் வரை தொடர்ந்து போராடப்போவதாகவும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவரில் நடந்த இம்ரான் அரசாங்கத்திற்கான எதிர்ப்பு பேரணியில் உரையாற்றிய பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான், பேரணி இஸ்லாமாபாத்தை அடையும் போது பிரதமர் கான் தப்பிக்க வாய்ப்பில்லை. நாங்கள் வீதிகளை முற்றுகையிட்டு அரசாங்கத்தினை முடக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
இம்ரானின் அரசாங்கம் கடலில் மூழ்கும் வரை நாங்கள் போராடுவோம் தற்போதைய அரசாங்கத்தின் அமைப்பு நாட்டின் இஸ்லாமிய அடையாளத்தை சிதைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தில் எதிர்க்கட்சிகளின் பல கூட்டணிகள் உள்ளன. அவை இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக இறுதி வரையில் போராடுவதென முடிவெடுத்துள்ளன.
எதிர்க்கட்சிக் கூட்டணியானது பாகிஸ்தானில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு கோரவில்லை, மாறாக உடனடியாகப் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. அதனடிப்படையில் 2023 இல் தான் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் தலைவர், பொதுத்தேர்தலைப் பற்றிக் குறிப்பிடுகையில், 2018இல் மக்களிடத்திலிருந்து திருடப்பட்ட வாக்குகளை அவர்களுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும். அரசாங்கம் அடுத்த தேர்தலில் மீண்டும் ஒருமுறை மோசடி செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானின் தற்போதைய இம்ரான் அரசாங்கத்தின் ‘மக்கள் விரோத’ நடவடிக்கைகள் மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவதுடன், இஸ்லாமாபாத்தை நோக்கி நீண்ட அணிவகுப்பு நடத்தும் முடிவு இம்மாத ஆரம்பத்தில் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.