இலங்கைசெய்திகள்

பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்று தெரியவரும்!!

Parliament

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது.

விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று நீக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், அவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ மற்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு அறிவிக்கப்படவுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் நடத்தவுள்ள விசேட ஊடக சந்திப்பில் தங்களது நிலைப்பாடு அறிவிக்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது கட்சியின் நிறைவேற்றுக்குழு இன்று கூடவுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் பின்னர், ஜனாதிபதியால் அமைச்சுப் பதவிகள் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளும், நேற்று முன்தினம் கொழும்பில் நடத்திய மாநாட்டில், ‘முழு நாடும் சரியான பாதைக்கு’ என்ற தொனிப்பொருளில் கூட்டு அறிவிப்பை வெளியிட்டன.

இதன்போது, விமல் வீரசன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்திருந்தனர்.

இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் விதுர விக்ரமநாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில், பங்காளிக் கட்சிகளின் மாநாடு தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் காமினி லொக்குகே, ‘முழு நாடும் சரியான பாதைக்கு’ என்ற மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர், அரசாங்கத்தை விமர்சித்த சுசில் பிரேமஜயந்த தாம் வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டிருந்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button