எதிர்காலத்தில் இப்பிரதேசத்திலிருந்து எமது கட்சியினூடாக, மாகாணசபை, நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். எனவே நாங்கள் இன அடிப்படையில் அரசியல் ரீதியில் செயற்படுவதை விட்டு விட்டு, அனைவரும் இணைந்து ஒன்றுபடுகின்ற சந்தரப்பத்தில்தான் சரியான அரசியல் இலக்கை அடைந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் செவ்வாய்கிழமை(15) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான ஒன்றுகூடலின்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
தற்போது நாட்டிலே இனங்களுக்கிடையிலான சில முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. தமிழ் பேசுகின்ற தமிழ் முஸ்லிம் உறவுகள் கொச்சப்படுத்தப்படுகின்றன. அந்த உறவுகளைப் பிரித்து அரசியல் ரீதியாக நன்மைகளைப் பெறுவதற்காக சில நாசகார சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் இனங்களை எவ்வாறு கவனிக்கின்றது என்பது தொடர்பில் அவதானிக்க வேண்டியுள்ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் பதவிகள் வழங்கி மக்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது என்பதுதான் கேள்வியாகவுள்ளது.
அமைச்சரைவையிலே தமிழ் பேசுகின்ற அமைச்சர்கள் இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனைககள் தீர்க்கப்பட்டுள்ளதா? முஸ்லிம் இனைத்தைச் சேர்ந்த ஒருவர் நீதி அமைச்சராக இருக்கின்றார் ஆனால் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கின்றதா? என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். அரசாங்கம் தமிழ் பேசுகின்ற மக்களை ஒரு வேடிக்கையாக நினைத்து, மக்களைக் குழப்பி அரசியல் நாடகத்தைச் செய்கின்றார்கள். இனவாதங்கள் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துகின்ற ஒரு பொருளாக மாறியுள்ளது.
தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை ஐக்கியப்படுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும். அவ்வாறு பயணிக்கின்ற ஒரு கட்சியாகத்தான் எமது ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டு வருகின்றது. வடக்கிலே சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு பல மக்கள் ஆதரவு வழங்குகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே அனைவரையும் ஒன்றிணைக்கின்ற கட்சியாகத்தான் எமது கட்சி பயணிக்கின்றது.
எதிர்காலத்தில் எவ்வாறான அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. தற்போது தமிழ் பேசுகின்ற அமைச்சர்களால் இப்பிரதேசங்களில் என்ன அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். வெறும் போஸ்ட்டருக்கான அமைச்சர்கள் வேண்டுமா? மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற அமைச்சர் வேண்டுமா? என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற அமைச்சரவையை சஜித் பிரேமதாஸவால் மாத்திரமே உருவாகக் முடியும். எனவேதான் எதிர்காலத்தில் இப்பிரதேசத்திலிருந்து எமது கட்சியினூடாக, மாகாணசபை, நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். எனவே நாங்கள் இன அடிப்படையில் அரசியல் ரீதியில் செயற்படுவதை விட்டு விட்டு, அனைவரும் இணைந்து ஒன்றுபடுகின்ற சந்தரப்பத்தில்தான் சரியான அரசியல் இலக்கை அடைந்த கொள்ள முடியும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
செய்தியாளர் – சக்தி