இலங்கைசெய்திகள்

இராணுவத்தினர் சிவிலியன்களின் தொழில் உரிமையை தடுக்க முடியாது – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்து!!

human rights

அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்புரை 14 இன் கீழ் சிவிலியன்களிற்கு இருக்கும் சட்டபூர்வமான தொழில் செய்யும் உரிமையை தடுப்பதற்கு இராணுவத்தினருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவ்வாறான நடவடிக்கை சிவிலியன்களின் அடிப்படை உரிமை மீறல்களாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (30) ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்ற விசாரணைகளை அடுத்தே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது,

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புல்மோட்டை பகுதியில் செங்கற் சூழை நடாத்தி வந்த 4 பிள்ளைகள் கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் நான்கு வருடமாக குச்சவெளி பிரதேச சபையின் அனுமதியினை பெற்று அவருடைய உறவினர் ஒருவரின் காணியில் சிறியளவிலான செங்கல் சூழை ஒன்றினை நாடாத்தி வந்துள்ளார். எனினும் அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கும் அவருக்கும் இடையில் எழுந்த தனிப்பட்ட பிரச்சினைகளை அடுத்து குறித்த குடும்பஸ்தர் தொழில் செய்யும் இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் அவரை தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்துள்ளதுடன் அவரை குறித்த தொழில் செய்யும் பகுதியில் இருந்து பொருட்களையும், தொழிலையும் அப்புறப்படுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் சுமார் 15 நபர்கள் செங்கல் சூழை நாடாத்தி வருகின்ற போதிலும் குறித்த குடும்பஸ்தர் தம்மை மட்டும் இராணுவத்தினர் தொழில் செய்யாது தடுப்பதாக அச்சமடைந்த குடும்பஸ்தர் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு விடயத்தை கொண்டுவந்த போதும் அவர்களால் போதுமான நடவடிக்கை எவையும் எடுக்காததனால், அவ்விடயத்தினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணலை காரியாலயத்திற்கு முறைப்பாடாக கடந்த மே 2021 கொண்டு வந்திருந்தார்.

குறித்த முறைப்பாடு நேற்று ஆணைக்குழுவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த சிவிலியன்களிற்கு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உள்ள சட்ட பூர்வ தொழில் அடிப்படை உரிமையை இராணுவத்தினர் தடுக்க முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது

இவ்விசாரணைக்கு பாதிக்கப்பட்டவர் சார்பில் சட்டத்தரணி அமானுல்லா தோன்றியதுடன் வாதங்களை முன்வைத்திருந்தார். பிரதிவாதிகள் தரப்பில் புல்மோட்டை அரிசிமலை இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி, 62 படைப்பிரிவின் தலைமை அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் சட்டத்தரணி போன்றோர் தோண்றியிருந்தனர். ஆணைக்குழு சார்பில் விசாரணை உத்தியோகஸ்தர்கள், பிராந்திய இணைப்பாளரும் சட்டத்தரணியுமாகிய ஆர்.எல்.வசந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விசாரணையின் இறுதியில் இருதரப்பிலும் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய குறித்த முறைப்பாடு சமரசப்படுத்தலின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டு வரப்படுள்ளதுடன் குறித்த குடும்பஸ்தரது தொழில் நடவடிக்கைக்கு இராணுவத்தினரால் எவ்வித தடங்கல்களும் ஏற்படுத்தப்படாது என இறுதியில் எழுத்து மூலமான ஆவணம் பெற்று கொள்ளப்பட்டதனையடுத்து குறித்த முறைப்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்சமயம் ஆணைக்குழுவின் திருகோணமலை காரியாலயத்தின் பிராந்திய இணைப்பாளரான சட்டத்தரணி ஆர்.எல். வசந்தராஜா வன்னி மக்களினால் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button