எரிவாயு வெடிப்புக்கள் – ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட விசேட விசாரணை அறிக்கை!!
Gas explosions
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 5ம் திகதி வரை நாடு முழுவதும் 458 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எரிவாயு சிலிண்டர் தீபற்றுகின்றமை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெடிப்பு குறித்து விசாரணை நடத்தி தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் 28ம் திகதி வரையான நாடு முழுவதும் 28 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எனினும், கடந்த 29ம் திகதி முதல் நேற்று முன்தினம் (05) வரையான ஒரு வார காலத்தில் மாத்திரம் 430 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஒரு வார காலப் பகுதியில் கடந்த 3ம் திகதியே அதிகளவான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அன்றைய தினத்தில் மாத்திரம் 142 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்புக்கள் தொடர்பான சாராம்சம்.
எரிவாயு சிலிண்டருக்கு சேதம் ஏற்பட்ட சம்பவம் :− 01
எரிவாயு குழாய்க்கு சேதம் ஏற்பட்ட சம்பவங்கள் :− 23
ரேகியூலேட்டருக்கு சேதம் ஏற்பட்ட சம்பவங்கள் :− 09
எரிவாயு அடுப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் :− 178
வேறு உபகரணங்களுக்கான சேதங்கள் :− 03
எரிவாயு கசிவு : 244
இனிவரும் காலத்தில் எரிவாயு நிறுவனங்களினால் உரிய அளவிலான இரசாயணம் உள்ளடக்கப்படும் என அந்த குழு கூறியுள்ளது.
எதிர்வரும் காலத்தில் எரிவாயு கசிவு ஏற்படும் பட்சத்தில், அது குறித்து பொது மக்கள் இலகுவாக அறிந்துக்கொள்ள முடியும் என அந்த குழு குறிப்பிட்டது.