இலங்கைசெய்திகள்

2019,2020களில் மட்டக்களப்பில் வெள்ள அனர்த்த நிலமை!!

Flood disaster situation

வடகீழ் பருவப் பெயற்சி ஆரம்பித்துவிட்டாலே மட்டக்களப்பு மாவட்டமக்களுக்கு வெள்ளஅனர்த்த பயமும் ஆரம்பித்துவிடும் எனலாம். இந்நிலையில் கடந்த வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் பாதிப்புக்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இருந்து எழுத்து மூலமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் 19263 குடும்பங்களைச் சேர்ந்த 66673 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2 பேர் காயமடைந்திருந்தனர். அதன்போது 27 இடைத்தங்கல் முகாம்களில் 1285 குடும்பங்களைச் சேர்ந்த 4134 நபர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 17978 குடும்பங்களைச் சேர்ந்த 62602 நபர்கள் உறவினர்கள் மற்றும் வேறு வீடுகளில் தங்கியிருந்தனர். இதன்போது 17885 குடும்பங்களைச் சேர்ந்த 60465 நபர்கள் பயனாளிகளதகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அக்காலப்பகுதியில் 20 நாட்கள் அரசாங்கத்தால் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டிருந்தன.

2019 ஆம் ஆண்டில் சமைத்த உணவுகளுக்காக 1,750,898.36 ரூபாவும், பாதிக்கப்பட்ட உலர் உணவு வினியோகத்திற்காக 25,706,517.89 ரூபாவும், பொருட்களுக்காக 37,672. ரூபாவுமாக மொத்தமாக இம்மாவட்டத்தில் 27,495,088.25 ரூபா 2019 இல் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் இம்மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 11281 குடும்பங்களைச் சேர்ந்த 35808 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 4622 குடும்பங்களைச் சேர்ந்த 14631 நபர்கள் உறவினர்கள் மற்றும் வேறு வீடுகளில் தங்கியிருந்தனர். இதன்போது 4542 குடும்பங்களைச் சேர்ந்த 14374 நபர்கள் பயனாளிகளாத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அந்த ஆண்டில் உலர் உணவு வினியோகத்திற்காக 6,427,800 ரூபாவும், வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பிரதான வீதிப் போக்துவரத்து சேவைகளுக்காக 25,000 ரூபாவும், துண்டிக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கான படகு சேவைகளுக்காக 156,784 ரூபாவும், வெள்ள நீர் தடைப்பட்ட பகுதிகளுக்கான ஜே.சி.பி, வேலைகளுக்கான கொடுப்பனவு 41,600 ரூபாவுமாக மொத்தமாக 2020 ஆம் ஆண்டில் 6,651,184 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் வடகீழ் பருவகால நிலையினால் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த திட்டம் மாட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப் பட்டுள்ளதுடன் கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டு காலப்பகுதியில் இம்மாவட்டத்தில் எவ்வித உயிர் இழப்புக்களும், ஏற்படாத வகையில் முப்படைகளின் உதவியுடன், முன்னாயத்த நடவடிக்கைகள் அரசாங்க அதிபரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக மட்டக்களப்பு கச்சேரியில் இருந்து செயற்பட்டு வரும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஸியாத் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மில்லியன் கணக்கான நிதிச் செலவுகளும், இடம்பெயர்வுகளும். இன்னல்களும், அவற்றுக்கு ஈடுகொடுக்கும் செயற்பாடுகளும், வருடவருடம் இடம்பெற்று வருகின்றன. அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்திலும் பருவகால மழை வீழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னாயத்தம் தொடர்பாக ஆராயும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் விசேட கலந்துரையாடல் அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனினும் மாவட்டத்தின் நிலமை அறிந்து வெள்ளஅனர்த்தத்தை தணிக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்கின்ற பட்சத்தில் இவ்வாறு வருடாந்தம் பல மில்லியன் ரூபா நிதி வெள்ள பாதிப்புக்களுக்கும், அதன் பின்னர் எற்படும் உட்கட்டுமானங்களுக்கும் செலவு செய்ய வேண்டிய நிலைமை குறைக்கப்படும் என சூழலியலாளர்களும், பொதுமக்களும் தெரிவிக்கின்றர்.

வ.சக்திவேல்

Related Articles

Leave a Reply

Back to top button