சரியான பாதையில் நடக்க முற்படுவோருடன் இணைந்து செயலாற்ற நாம் தயார் – ஈ.பி.ஆர்.எல்.எப்!!
EPRLF
நாடு இன்று எதிர்நோக்கியுள்ள மோசமான நிலையை எண்ணி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கவலைகொண்டுள்ளது. நாட்டின் நன்மை கருதியும், முன்னேற்றம் கருதியும் கடந்தகால தவறுகளிலிருந்து பாடம்கற்றுக்கொண்டு சரியான பாதையில் நடக்க முற்படுவோருடன் இணைந்து செயலாற்ற தயாராக இருக்கின்றோம் என ஈ.பி,ஆர் எல்.எப். தெரிவித்துள்ளது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு கூட்டம் (05) வவுனியாவில் உள்ள அதன் காரியாலயத்தில் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் சமகால அரசியல் குறித்தும் நாட்டின் நிலைமை குறித்தும் மாறிவரும் உலக அரசியல் குறித்தும் விவாதிக்கப்பட்டதுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இதுவரை காலமும் சரியான பாதையிலேயே பயணித்து வருகின்றது என்பதையும் மத்தியகுழு உறுப்பினர்களுக்கு கட்சித்தலைவரினால் தெளிவூட்டப்பட்டது.
இதன் பின்னர் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களின் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்ற நிலையில் கட்சியினால் கூட்டத்தின் நிறைவாக பின்வரும் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஆறு கட்சிகள் இணைந்து பதிமூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்திய பிரமதருக்கு எழுதிய கடிதத்தை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு வரவேற்கிறது. அத்துடன் பதின்மூன்றாவது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் விரைந்து நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.
- வடக்கு மாகாணத்தின் தீவுப்பகுதிகளான அனலைதீவு, நையினாதீவு, நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் மாற்று மின்சக்தித் திட்டத்தை மேற்கொள்வதற்கு சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் அவ்வாறான ஒப்பந்தத்தை இரத்து செய்து, அந்த மாற்று மின் உற்பத்தி செயற்றிட்டத்தை இந்திய அரசின் ஊடாக மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
- தமிழகத்திலும் இலங்கையின் வடக்கு மாகாணத்திலும் ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசும் இலங்கை அரசும் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், நாட்கணக்காக கடலில் தங்கி மீன்பிடியில் ஈடுபடக்கூடிய வகையில் மீனவர்களுக்கு மானியங்கள் கொடுத்து மீன்பிடித்தொழிலை மேற்கொள்வதற்கு வழிசெய்ய வேண்டுகிறோம். மேலும், இலங்கையின் வடகடல் பரப்பில் இழுவை மடிவலைகளைப் பாவிப்பதனால் மீன் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், இலங்கை மீனவர்களின் தொழிலும் வாழ்வாதாரமும் பாதிப்படைகின்றது. இவற்றைக் கவனத்தில் கொண்டு இந்த இழுவை மடிவல்லங்களைத் தடைசெய்ய வேண்டுமென்று கோருகின்றோம்.
- இலங்கை அரசாங்கத்தினுடைய மோசமான விவசாயக் கொள்கைகளின் காரணமாக, இலங்கையில் கடந்த பெரும்போகத்தில் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்உற்பத்தி பாரிய அளவில் வீழ்ச்சிகண்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நட்டஈடு வழங்குவதுடன், அடுத்த காலபோக நெற்செய்கைக்கான அனைத்து உரவகைகளும் அதற்கான மானியமும் வழங்கப்படவேண்டும்.
- தமிழ்த் தேசிய இனத்தை ஒடுக்குவதையும் அதன் இருப்பை இல்லாமல் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இலங்கை அரசாங்கம் உலகநாடுகளிடம் வாங்கிய கடனும் பொருத்தமற்ற நிதிமுகாமைத்துவமும் தெளிவற்ற வெளியுறவுக்கொள்கையும் இன்று ஒட்டுமொத்த நாட்டையும் பட்டினியில் ஆழ்த்தியுள்ளதுடன், அரச நிர்வாகத்தையும் முடக்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. நாடு இன்று எதிர்நோக்கியுள்ள மோசமான நிலையை எண்ணி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கவலைகொண்டுள்ளது. நாட்டின் நன்மை கருதியும், முன்னேற்றம் கருதியும் கடந்தகால தவறுகளிலிருந்து பாடம்கற்றுக்கொண்டு சரியான பாதையில் நடக்க முற்படுவோருடன் இணைந்து செயலாற்ற நாம் தயராக இருக்கிறோம்.
- உலகநாடுகளாலும், சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களாலும் முற்றுமுழுதாக நிராகரிக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை நாம் கோருகின்றோம்.
- ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை நாம் வரவேற்பதுடன், இலங்கையின் யுத்த குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் சாட்சியங்களையும் ஆவணங்களையும் சேகரித்துள்ளமையையும் நாம் வரவேற்கின்றோம். இந்த நடவடிக்கைகளானது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
- யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தை விரைவாக முன்னெடுத்து அவர்கள் தமது சொந்தவீடுகளில் குடியமர்வதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
- வடக்கு-கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டும், இந்த பகுதியில் உற்பத்திசார் தொழிற்சாலைகளை அமைக்கும் பொருட்டும் இந்திய அரசாங்கம் எமது இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் உதவி செய்ய வேண்டும் என்று இந்திய அரசைக் கோருகிறோம் என்பதே அத்தீர்மானங்களாக அமைந்துள்ளன.
செய்தியாளர் கிஷோரன்.