அநியாயமான மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக அடுத்த வாரம் நீதிமன்றில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும், மின்சார அமைச்சு, மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை பிரதிவாதிகளாக குறிப்பிடவுள்ளதாகவும் அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்ட ஆலோசனைகளை பெற்று இது தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு சட்டத்தரணிகளுக்கு தேவையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்த போதிலும், கைத்தொழில்துறையினரால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக உள்நாட்டில் இயங்கும் சுமார் 12 இலட்சம் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளதாகவும், 90 அலகுகளுக்குப் பின்னர் ஒரு யூனிட்டுக்கு செலுத்தப்படும் 27 ரூபா தற்போது 50 ரூபாவாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கைத்தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் உள்நாட்டு நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்க உச்சநீதிமன்றம் செல்ல தனது சங்கம் செயல்பட்டு வருவதாகவும் மின்கட்டண உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் வீட்டில் மின்கட்டணம் செலுத்தும் போதும், பொருட்களை வாங்கும் போதும் மின்கட்டண உயர்வை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.