“யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டடார் என்ற செய்தியை நான் மறுக்கவில்லை. ஆனால், அந்த நியமனத்துக்குக் கொடுக்கப்பட்ட வியாக்கியானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதி இங்கு வந்து கூட்டத்தில் பங்கேற்று வடையும் ரீயும் சாப்பிட்டுப் போகலாம்.”
- இவ்வாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வரும் நிலையில் அவருக்கு எதிராக பொதுமக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பல முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்துக்குக் கிடைக்கப் பெற்றதையடுத்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளரான கீதநாத் காசிலிங்கம், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது’ – என்று நேற்று செய்தி வெளியாகியிருந்தது.
இந்தச் செய்தி தொடர்பில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான அங்கஜன் இராமநாதன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
“பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டார் என்ற செய்தி பல ஊடகங்களில் வெளியானது. இது தொடர்பாக ஊடகங்களைத் தொடர்புகொண்டபோது நியமிக்கப்பட்டவர் தெரிவித்த விடயங்களையே தெரிவித்தோம் என்றன.
பிரதமர் அலுவலகத்தின் பிரதிநிதியாக அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியும் என்பதுடன் இலகுவான இணைப்புக்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்றும் உள்ளது. இதை நான் வரவேற்கின்றேன். மக்களின் தேவைகள் நேரடியாகப் பிரதமர் அலுவலகத்துக்குத் தெரியவரும்போது அதில் பல நல்ல விடயங்கள் உள்ளன. ஆனால், இந்தச் செய்திக்கு அரசியல் உள்நோக்கத்தோடு கொடுக்கப்பட்ட வியாக்கியானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இந்தச் செய்தி மாத்திரம் அல்ல. தொடர்ச்சியாக எம் மீது அவதூறு பரப்பிய பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இணைப்பாளராக உள்ள என்னை வளர்த்து விடுகின்றீர்கள் என என்னுடைய செயலாளருக்கும் அவர் செய்தியை அனுப்பி இருக்கின்றார். தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்காகப் பிரதமர் அலுவலகத்தையும் ஊடகங்களையும் பயன்படுத்திப் பிழையான செய்தியை அவர் கூற முற்படுகின்றார்.
கடந்த காலங்களில் இந்த அலுவலகத்தின் ஊடாக செய்யப்பட்ட வேலைகளை விட பல விடயங்களை தற்போது செய்யக் கூடியதாகவுள்ளது. நான் செய்தது பிழையெனில் அதற்கு நான் முழுப் பொறுப்பு ஏற்கின்றேன். ஆனால், பொய்ச் செய்தியைச் சொல்லி சுயலாப அரசியல் செய்வதற்கு இணைப்பாளர் என்பவருக்கு ஒரு சிலர் உடந்தையாக இருக்கின்றனர்.
குறித்த நபர் ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி, பிரதமரின் வேலைத்திட்டத்தை நான், ‘என் கனவு யாழ்’ என்று என்னுடைய வேலைத்திட்டமாக மாற்றுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதனை நாமல் ராஜபக்சவின் முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தார். இது தொடர்பில் நான் நாமல் ராஜபக்சவுடன் கேட்டபோது அது தனது முகப்புத்தகம் அல்ல. அது பலர் நடத்துகின்ற முகநூல் என்றார். அவருக்குத் தெரியாமலேயே பல விடயங்கள் நடப்பதாகவே நான் நினைக்கின்றேன்.
மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போட்டி போட்டுக் கொண்டிருப்பது எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.
ஒரு சிலர் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அரசியல் காய்நகர்த்தல்களைச் செய்வதாகவே நான் பார்க்கின்றேன். இவரைப் பற்றிச் சொல்வதானால் யாழ். மாவட்டத்துக்கும் ஊடகங்களுக்கும் புதிதாக இருக்கலாம். இவரை எனக்கு நீண்டகாலமாக தெரியும். நாமல் ராஜபக்சவின் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக இருந்தார். நாமல் ராஜபக்ச கிளிநொச்சியில் செய்த வேலைகளின் ஆதரவைக் குறைக்க காரணமாக இருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் இவர் 2013இல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கான காரணத்தை நீங்கள் அவர்களிடமே கேட்டுப் பாருங்கள். மக்களுக்கு நல்லது செய்ய விரும்புவர்களைத் தாக்கி அதிலிருந்து முன்னேற நினைப்பதை மிகவும் தவறான விடயமாக நான் பார்க்கின்றேன்.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவர்கள் சார்பில் ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இங்கு வந்து கூட்டத்தில் பங்கேற்று வடையும் ரீயும் சாப்பிடலாம்” – என்றார்.
செய்தியாளர் – சுடர்