கவிதைமுத்தமிழ் அரங்கம்.

இராணுவச் சிப்பாயின் ஆத்மா பேசுகிறேன் – பிரபா அன்பு!!

poem

எதிரியை அழிக்கவென
ஆட்சியாளர் எனை அழைத்தபோது
இதயத்தை இரும்பாக்கி
என் மனைவி நில்மினியை
குடும்ப சுமை ஏற்கவைத்து
எண்ணிலடங்கா துயரத்தோடு
புறப்பட்டேன் களம் நோக்கி
நாயாறு பாலத்தருகே
புஞ்சிபண்டா தலைமையிலே
நாம் அணி அணியாய் சென்றபோது
எதிரியின் கிளைமோரில்
என் உயிரும் போனதன்றோ
போரிலே நான் மடிந்ததனால்
பல படிவம்தனை நிரப்பிக்கொண்டு
மாதக்காசு பெற்றுக்கொள்ள
என் மனைவி அலைந்து திரிந்தாள்
சில காமுகரின் பார்வையினால்
உதவி பணமும் வேண்டாமென
வீடுவந்து அழுதபடி உண்ணாமலும் உறங்கினாளே
நாட்டிலே பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால்
என் மனைவி பிள்ளைகளும் உணவின்றி தவிக்கின்றனர்
நான் உயிர் கொடுத்து பெற்ற தேசத்தில்
வேற்று நாட்டவர்கள் வந்தமர்ந்து கொண்டாட்டம் போடுகின்றார்கள்
இதுபோல நடக்குமென்று ஏற்கனவே தெரிந்திருந்தால்
என் உயிரான குடும்பத்தை நட்டாற்றில் தவிக்கவிட்டு
போரிற்கு வந்திரேனே
என்தேச தலைவர்களே உங்களை நம்பித்தானே
என்னுயிரை நான் விட்டேன்
இன்று என் குடும்பம்
வறுமையோடு கண்ணீரில் வாடுதங்கே…..

Related Articles

Leave a Reply

Back to top button