நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைத்திருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்தில் பங்குபற்றமாட்டோம் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ கடிதம் மூலம் கூட்டமைப்பின் இரா.சம்பந்தனுக்கு அறிவித்திருந்த போதிலும், அது தொடர்பில் – கூட்டத்தில் பங்குபற்றுவதா, இல்லையா என்பது சம்பந்தமாக ரெலோ இன்னும் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கின்றது எனத் தெரியவருகின்றது.
நாளை (15) பிற்பகல் 3.30 மணிக்கு ஜனாதிபதியைச் சந்திக்கச் செல்வதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் என்ன பேசுவது என்று ஆராய்வதற்கான கூட்டம் ஒன்றை பிற்பகல் 1.30 மணிக்கு தமது இல்லத்தில் சம்பந்தன் கூட்டியுள்ளார்.
அந்தக் கூட்டத்தில் பங்குபற்றிய பின்னரே, ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்வதா, இல்லையா என்பதை அங்கு வைத்துத் தீர்மானிப்போம் என்று ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. நேற்று (13) மதியம் சென்னையில் தெரிவித்திருக்கின்றார்.
சென்னைக்குச் சென்றிருக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. அங்கு தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் நேற்று மதியம் விருந்துணவை முடித்துக்கொண்டு வெளியே வந்த சமயம், அதே ஹோட்டலுக்குள் நுழைந்து கொண்டிருந்த ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியை எதிர்பாராத விதமாக எதிரும் புதிருமாகச் சந்தித்திருக்கின்றார்.
“என்ன இங்கு திடீரென?” என்று செல்வம் எம்பியைப் பார்த்துச் சுமந்திரன் எம்.பி. கேட்டார். ரெலோவின் முன்னாள் தலைவர் சுந்தரம் சிறிசபாரத்தினத்தின் சகோதரியின் மரண வீடு நேற்றுமுன்தினம் (12) தமிழகத்தில் நடைபெற்றமையால் அதில் பங்குபற்றுவதற்காகத் தாம் திடீரென சென்னை புறப்பட்டுச் வந்தார் என்றும், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவே கொழும்பு திரும்பவுள்ளார் என்றும் அப்போது பதிலளித்திருக்கின்றார் செல்வம் எம்.பி.
“என்ன ஜனாதிபதியுடனான சந்திப்புத் தொடர்பில் சம்பந்தன் ஐயாவுக்குக் கடிதம் எல்லாம் எழுதியிருக்கின்றீர்களாம். செய்திகள் அறிந்தேன்” என்று கேட்டார் சுமந்திரன் எம்.பி.
“இல்லை. சம்பந்தன் ஐயா செவ்வாய் மதியம் கூட்டியிருக்கும் கூட்டத்துக்கு வருவேன்” என்று பதிலளித்தார் செல்வம் எம்.பி.
“அதுதான் உங்கள் கட்சியின் அரசியல் உயர் குழு கூடி ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்குபற்றுவதில்லை என்று தீர்மானம் எடுத்து விட்டதாக நீங்கள் எழுத்தில் சம்பந்தன் ஐயாவுக்கு அறிவித்துள்ளீர்களே. சம்பந்தன் ஐயா, முதலில் கூட்டியுள்ள கூட்டம் ஜனாதிபதியுடன் என்ன பேசுவது என்பது குறித்து ஆராய்வதற்கான கூட்டம்தான். ஜனாதிபதியைச் சந்திக்க வருவதில்லை என்று தீர்மானம் எடுத்த நீங்கள் அந்தக் கூட்டத்துக்கு வந்து என்ன செய்யப்போகின்றீர்கள்?” என்று சாரப்பட கேள்வி எழுப்பினார் சுமந்திரன் எம்.பி.
“இல்லை, இல்லை. அப்படித் தீர்மானம் இல்லை. செவ்வாய் பிற்பகலில் சம்பந்தன் ஐயா கூட்டியுள்ள கூட்டத்தில் பங்குபற்றுவோம். ஜனாதிபதி கூட்டிய சந்திப்பில் பங்குபற்றுவதா? இல்லையா? என்பதை அங்குதான் தீர்மானிப்போம்” என்று பதிலளித்தார் செல்வம் எம்.பி. என அறியவந்தது.
……….