மண்வாசனை

தூரக்கனவுகளும் துயரநினைவுகளும்-5!!

manvaasanai

 நானும் எனது தோழி ஒருவரும் வேலை விடயமாக ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் நேரம் இருள்சூழத் தொடங்கியிருத்தது. அதனால் குறுக்குப்பாதை ஊடாக வீட்டிற்குப் போவோம் என தீர்மானித்தோம். 

அவ்வாறு இடைப்பாதைகள் ஊடாக நாங்கள் வரும்போது வீதி ஓரமாக ஒரு மெல்லிய தோற்றமுடைய வயோதிபர் ஒருவர் ஒரு கேக்குத் துண்டோடு வீதியின் ஓரத்தில் நிற்பதைப் பார்த்தேன். 

வீட்டைச் சுற்றி நான்கு பக்கமும் தோட்டமே காணப்பட்டது.அந்த ஐயா நின்ற வீடு மட்டுமே தனியாக அமைந்திருந்தது.வீட்டுக்காணியைச் சுற்றி அடைக்கப்படாமல் இருந்தது. 

அவர் நின்றுகொண்டிருந்ததன் பக்கத்தில் கால் முறிந்து தடியால் கயிறு கொண்டு சுற்றிக் கட்டப்பட்ட சிறிய மரக்கதிரை ஒன்றிருந்தது. 

பார்ப்பதற்கு மிகவும் வறுமை நிலையில் இருப்பவர் போலவே தெரிந்தார். அதனால் ஒரு தடவை அவரைப் பற்றி விசாரித்துவிட்டு வருவோம் என்று உந்துருளியால் இறங்கிப் போனோம். 

மெல்ல அந்த ஐயாவோடு கதைக்க ஆரம்பித்தேன். “என்னய்யா இதில் தனியவா இருக்கிறீர்கள்..? கையில கேக்கோட நிற்கிறீங்கள்,  சின்னப் பிள்ளைகள் யாரும் வீட்டில இருக்கினமா” என்று கேட்டேன். 

“இல்லை தனியத்தான் இருக்கிறன் பிள்ளை,  எனக்கு என்று யாரும் இல்லை,  இளம் வயதில திருமணம் செய்யாமல் ஐயா, அம்மாவோட இருந்திட்டன்.அவர்களும் வயதுபோய் இறந்தாப் பிறகு தனிச்சுப்போனன்.அதால சொந்த பந்தமென்றும் எனக்கு யாரும் இல்லை . இப்ப கிட்டடியில பெய்த மழையில வீட்டுக்க வெள்ளம் வந்து நிலம் ஊறி எனக்கு கைகால் இழுத்துப் போட்டுது. என்னால நடக்கேலாம போனதில ஒரு கிழமையா கொஸ்பிரலில இருந்து நேற்றுத்தான் ரிக்கட்வெட்டி வந்தனான்” என்று கூறினார். 

“இரவுக்கு என்னய்யா சாப்பாடு?”  என்று கேட்டேன்.

 “இதுதான் பிள்ளை எனக்கு இரவுச் சாப்பாடு” என்று கேக்கைக் காட்டியவர் 

“என்னால நடக்கேலாது பிள்ளை, தெரிந்த ஒராளை அனுப்பி கடையில இந்த கேக்கை வாங்கின்னான்” என்று கூறினார். 

“இந்தச் சின்னத்துண்டு கேக்கு இரண்டு கடி கடிப்பதோடு முடிந்துவிடும்,  பசிக்கு காணுமா” என்று கேட்டேன். 

“தெரிந்த ஆட்கள் தாற சாப்பாடுதான் பிள்ளை, இளம் இரத்தம் ஓடியாடி திரியேக்க தெரியேல, இப்ப வயதுபோனாப் பிறகுதான் விளங்குது, என்ன செய்றது அப்பவே ஒரு கலியாணத்தை கட்டியிருந்தால் சொந்த பந்தமென்று யாராவது இருந்திருப்பினம்.எல்லாத்துக்கும் காலம் கடந்திட்டுது” என்று கூறியவர் பெருமூச்சொன்றை இழுத்துவிட்டார். 

“சரி ஐயா  இருக்கிற வீட்டை ஒருக்கா பார்ப்போம்” என்று கூறியபடி வீட்டைச் சுற்றிப் பார்த்தேன்.வீட்டின் முன் பக்கம் தகரத்தால் அடைத்தபோதும் பின் பக்கம் அடைக்காமல் முழுமையாக திறந்த நிலையில் இருந்தது. படுப்பதற்குக்கூட உரப்பை போட்டுத்தான் படுத்துறங்குவது தெரிந்தது. அவரிடம் மாற்றிப்போடுவதற்கோ அதிகமாக உடுப்புக்கள் இல்லாதிருந்தது.

“முக்கியமான உதவி ஏதாவது தேவையா” என்று கேட்டேன்.

“இருக்கிற ஒரு  விளக்கிற்கும் திரி பிரச்சினை, எனக்கு மண்ணெண்ணையும் வாங்கித்தந்து இந்த வீட்டையும் ஒருக்கா ஏலுமென்றால் பின்பக்கம் அடைத்து தர முடியுமா?” என்று கேட்டார். 

எமக்கும் நேரம் போய்க்கொண்டிருந்தபடியால் கைச் செலவிற்கு வைத்திருக்கும்படி  சிறுதொகைப் பணத்தினை கொடுத்துவிட்டு.  பிறகு வருகிறோம் என்று கூறிவிட்டு வந்துவிட்டோம். 

எனது வேலைகள் காரணமாக பத்து நாட்கள் அந்த ஐயாவைப் போய்ப்பார்க்கமுடியவில்லை.முதல் தடவை சந்தித்தபோது அவரின் புகைப்படத்தை எடுத்து வந்திருந்தேன். 

வெளிநாட்டில் இருக்கும் அக்கா ஒருவரோடு கதைத்துக்கொண்டிருக்கும்போது இவரின் நிலைப்பாட்டைக் கூறினேன். 

இந்த ஐயாவின் புகைப்படத்தைப் பார்த்தவர் மிகவும் கவலைப்பட்டார்.தான் வீட்டின் பின்பக்கத்தை அடைத்து தருவதாக கூறினார். 

பத்து நாட்களின் பின்பு போனபோது அந்த ஐயா இருந்ததைவிட மிகவும் மோசமான உடல் நிலையோடு ஊன்றுதடியோடு நடக்கமாட்டாமல் நடந்து வருவது தெரிந்தது.பத்து நாட்களின் முன்பு அவரை சந்தித்து உரையாடியதைக் கூறினேன். 

வீட்டிற்குள் படுக்கையில் அறணை கடித்துவிட்டதால் தன்னுடைய உடல்நிலை ஏலாமல் போய்விட்டதாகக் கூறியதோடு உடல் ஒரே நடுக்கம் என்று கையையும் தூக்கிக் காட்டினார். 

அவரது வலக்கையில் வீக்கமாக இருந்தது.கையும் மடித்து வைத்திருக்க முடியாதிருந்தார். 

 நடக்கும்போது தெரிந்த உறவுகளிடம் உணவு வாங்கி உண்டவர் இப்போது நடக்க முடியாதபடியால் உணவின்றித் தவித்தார். 

“ஏன்,  வழமையாக உணவு தரும் வீட்டுக்காறரிடம் உணவு வாங்கிச் சாப்பிடேலாதா”, என்று கேட்டேன். 

“இப்ப அரிசி,மரக்கறி அதிகமாக விலை ஏறிட்டுது பிள்ளை.சாப்பாடு தரும் குடும்பமும் கூலி வேலைகளிற்குப் போகிறவர்கள் , தங்களுக்கு சமைக்கிறதிலதான் எனக்கும் கொஞ்சம் கிள்ளி தாறவே. இப்ப வேலைகள் இல்லாதபடியால் அவர்கள் ஒழுங்காக தருவதில்லை. தரமாட்டார்கள் என்றில்லை, இடைக்கிடை தருவார்கள், இப்படி போறவாற தெரிந்த வேறு யாராவது தந்தால் சாப்பிடுவேன். இல்லாட்டி பட்டினிதான் பிள்ளை” என்று கூறினார். 

ஐயாவின் நிலமையைப் பார்க்க  மனமெல்லாம் வேதனையாக இருந்தது.என்ன பதில் கூறுவதென்றே தெரியாமல் இருந்தது. 

“சரி ஐயா, இப்ப என்ன சாப்பிட்டனீங்கள்” என்று கேட்டன். 

“பக்கத்து தோட்டத்தில தண்ணி இறைப்பதற்கு வந்த தம்பி தேத்தண்ணி தந்தார்” என்று கூறினார். 

“ஐயா இப்ப சாப்பிட உங்களுக்கு என்ன வாங்கித் தாறது” என்று கேட்டேன்.

 “உப்பு பிஸ்கற் வாங்கித் தாங்கோ” என்று கூறினார். 

‘சரி நில்லுங்கோ வருகிறோம்’ என்று கூறிவிட்டு கடைக்குச் சென்று யூஸ் போத்தல், கிறீம் கிறேக்கர் விஸ்கற், கேக்மெழுகுதிரி, தீப்பெட்டி என்பவற்றை வாங்கி வந்து கொடுத்தேன். 

ஐயாவிடம் “முதியோர் காப்பகத்தில் சேர்த்து விடட்டுமா?” என்று கேட்டேன். 

தன்னால ஏலாமல் இருப்பதால் எங்கயாவது முதியோர் காப்பகத்தில் சேர்த்துவிட்டால் தான் பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறினார். 

கிராமசேவையாளர்  ஊடாக தொடர்புகொண்டு ஐயாவின் நிலைப்பாட்டை கூறினேன்.தான் மறுநாள் 11மணி அப்படி வருவதாக கூறினார்.  அதனால் ‘நாளை வருகிறோம்’ என்று ஐயாவிடம் கூறிவிட்டு வந்தோம். 

மறுநாள் அவசர வேலைகள் சில இருந்தபடியால் நேரத்தோடு வேலைகளை முடித்துவிட்டு சறம்

சேட் துவாய்  என்பவற்றை வாங்கிக் கொண்டு ஐயாவைப் பார்க்கப் புறப்பட்டோம். 

நாம் போகும்போது அருகில் தோட்ட தொழிளாலர்களிற்கு கொடுப்பதற்கென்று தேநீர் கொண்டு சென்ற ஒரு அம்மா ஐயாவிற்கும் தேநீர் கொடுத்துவிட்டு கதைத்துக் கொண்டிருந்தார். 

அவரிடம் ஐயாவைப் பற்றி விசாரித்தோம். இப்படி போய்வரேக்க இடைக்கிடை தாமும் தேநீர் உணவு கொடுப்பதாக கூறிக்கவலைப்பட்டார். 

சிறிது நேரத்தில் கிராமசேவகரும் வந்துவிட்டார்.  ‘ஐயாவிற்கு சரியான உணவில்லை அத்தோடு அவரிற்கு அறணையும் கடித்துவிட்டாதால் பலமிழந்து நடக்க முடியாமல் இருக்கிறார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி அதன் பின்பு முதியோர் காப்பகம் அனுப்பி வைக்கும்படி’  கேட்டுக்கொண்டோம், தான் அவரை அனுப்புவதற்குரிய ஒழுங்குகளை செய்வதாக கிராமசேவகர் கூறினார். 

கொண்டு சென்ற உடுப்புக்களை ஐயாவிடம் கொடுத்தேன், குளித்துவிட்டு போடும்படி. 

தன்னால தூர இடத்துக்கு நடந்து குளிக்க போகேலாது, என்றும் நடக்க உடம்பெல்லாம் நடுங்குது என்று கூறினார். 

அருகில் கிணறும் இல்லை,  அதனால் யாராவது பின்னேரம் தெரிந்தவர்கள் றோட்டால போனால் கூப்பிட்டு அவர்களின்ர உதவியோடு குளிக்கும்படி கூறி உடைகளையும் கொடுத்துவிட்டு அவருக்கு விருப்பமான கிறீம் கிறேக்கர் பிஸ்கட், கேக் என்பவற்றை வாங்கி கொடுத்து சிறிய தொகை பணமும் கொடுத்திட்டு வந்தோம். 

மறுநாள் காலையில் ஐயாவை அவசரமாக அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றார்கள். 

அவரிற்குஅறணை கடித்ததன் பின்பு அதிகமான நடுக்கம், அத்தோடு உணவுண்ணாமல் களைப்பு என்று மிகவும் மெலிந்து காணப்படுகிறார். 

மருத்துவமனையில் சிகிச்சை முடிய முதியோர் காப்பகத்திற்கு அனுப்புவதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு தனிய இருந்து உணவின்றி கஸ்ரப்படும் முதியவர்கள் யாராவது இருந்தால் உங்கள் கிராமசேவகர் ஊடாக தெரியப்படுத்தி அவர்களிற்கு ஒரு பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். 

இந்த ஐயா படுத்து உறங்குவதற்குக்கூட ஒரு பாயில்லாமல் உரப்பையில் தூங்கி எழும்பியிருக்கிறார்.அரைச்சாண் வயிற்றை நிரப்ப முடியாது எத்தனைநாள் பட்டினியில் தூங்கி எழுந்திருக்கிறார். 

இந்த உலகத்தில் நாம் கொண்டு செல்லுவதற்கு எதுவுமில்லை.முடிந்த அளவு இயலாதோரிற்கும் அநாதைகளாக நின்று தவிப்போருக்கும் உதவிக்கரம் கொடுத்துதவுவதே பெரிய கடமையும் மனிதாபிமானமும். 

ஒருவரிற்கு உதவுவதற்கு பணம், பொருள்தான் தேவையென்று இல்லை சரீர உதவிகள் செய்தால்கூட போதும். ஆறுதலின்றி தவிப்பவர்களிற்கு அன்பாக இரண்டு வார்த்தை ஆறுதலிற்காகவாவது கதைத்துக்கொள்ளுங்கள். 

முதுமையும் அனைவருக்கும் பொதுவானது.நல்ல எண்ணங்களை மனதில் விதைத்து இயலாதோர்க்கு உதவியாக இருக்க முயற்சிப்போம்.

Related Articles

Leave a Reply

Back to top button