கெரவலப்பிட்டிய அனல் மின்நிலையம் தொடர்பாக அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அரசு சபையில் சமர்ப்பிக்க இழுத்தடித்த நிலையில் அந்த ஒப்பந்தத்தை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. சபையில் சமர்ப்பித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சு ,பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு, நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு, சமுர்த்தி உள்ளகப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தின்போதே அவர் அதனைச் சபையில் சமர்ப்பித்தார்.
அவர் விவாதத்தில் உரையாற்றும்போது தெரிவிக்கையில்,
“இலங்கை அரசுக்கும் நியூபோர்ட்டர்ஸ் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு கோரியிருந்தேன். ஆனால், இதுவரையில் அது முன்வைக்கப்படவில்லை. அது இருக்குமாக இருந்தால் இன்று இந்த விவாதத்தில் பிரயோசமாக இருந்திருக்கும். ஆனால், அதனை அமைச்சரவையிலோ பாராளுமன்றத்திலோ முன்வைக்கவில்லை.
எவ்வாறாயினும் அந்த ஒப்பந்தம் என்னிடம் உள்ளது. 2021 செப்டெம்பர் 21ஆம் திகதி இலங்கை சார்பாக திறைசேரி செயலாளர் கையெழுத்திட்டுள்ளார். இது தனிப்பட்ட சொத்தைக் கையகப்படுத்தும் ஒப்பந்தம் அல்ல. இது நாட்டின் மின்சார உற்பத்தி சொத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் ஒப்பந்தமாகும். இவ்வாறான விடயங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும். நான் அந்த ஒப்பந்தத்தைச் சபையில் முன்வைக்கின்றேன்.
இந்த ஒப்பந்தமானது அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட நிறுவனத்துடன் செய்துகொள்ளப்படவில்லை. அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்துடனேயே செய்யப்பட்டுள்ளது. இதனால் முழுமையாக அமைச்சரவை தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதில் இரண்டு வருடங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை இருதரப்பின் இணக்கப்பாடு இன்றி நாட்டுக்கோ மக்களுக்கோ பகிரங்கப்படுத்தப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. இவ்வாறு இருக்கையில் ஏன் இதனை மறைக்க வேண்டும்? இதன்படி இந்த ஒப்பந்தத்தை மறைத்து வைத்திருந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு 7 மூளைகளைக் கொண்டவர் வந்ததும் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்று கூறினர். அதன்படி பிரதமரிடம் இருந்த நிதி அமைச்சை பஸிலிடம் ஒப்படைத்தனர். இதேவேளை, கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவதாக நிதிச் சலவை சட்டத்தையும் கொண்டு வந்தனர். இதன்மூலம் எவ்வளவு பணம் நாட்டுக்கு வந்துள்ளது? எவ்வளவு கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டுள்ளது? என்று கூற வேண்டும்” – என்றார்.
செய்தியாளர் – சுடர்