சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலரின் குரு பூஜை தினம் நேற்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஆறுமுகநாவலரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.அவர் தொடர்பான நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றது.
கருமாரி அம்மன் தேவஸ்தானத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ நா.பிரபாகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அந்தணர்கள் மற்றும் தமிழ்மணி அகளங்கன், இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகனேஸ்வரசர்மா, விரிவுரையாளர் அருந்ததி ரவீந்திரன், செட்டிகுளம் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ கஜேந்திரகுமார் மற்றும் மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை இன்று மாவீரர் தினமாகையால் ஆலயத்திற்கு வெளியில் பெருமளவான புலனாய்வு பிரிவினர் குழுமியிருந்ததுடன் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் ஆலயத்திற்குள் வருகைதந்து புகைப்படம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் கிஷோரன்