‘உலகம் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கிறது’ என்ற வாசகத்தின் முழு அர்த்தமாய் என் உலகம் என் வீட்டிலிருந்த புத்தகங்களில்தான் இருந்தது.
அப்பா தன் அன்பை வெளிப்படையாக காட்டிக்கொண்டதில்லை என்றாலும் நான்கு பெண் பிள்ளைகளையும் ஆளுமையானவர்களாக வளர்த்து விடவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருந்தார்.
அவருடைய அந்த சிந்தனையின் வடிவமாக இருந்ததுதான் எங்கள் வீட்டில் இருந்த நூலகம்.. அளவுகணக்கில்லாத வாசிப்பு பற்று….
அம்மாவின் ஆர்வம் புத்தகங்களை வாசிப்பதில் இருக்க அப்பாவின் ஆர்வம் வாசிப்பதோடு நிறைய புத்தகங்களைத் தேடவும் வைத்தது.
சினிமாப்படங்கள் மீது எனக்கிருந்த ஆர்வம் படிப்பை சற்றே நகர்த்திவைத்தது என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் 5 இடங்களுக்குள் வந்துவிடுவேன். ….
ஆரணி உனக்கு ஒரு விடயம் தெரியுமா? அப்போது எனக்கு கணக்கு பாடம் வராது ஆங்கிலம் சுத்தமாக வரவே வராது.
என் வகுப்பு தோழிகள் எல்லாம் ஆங்கில வகுப்புகளுக்கு போக ஆசைப்பட்டாலும் போகமுடியாத வறுமை என்னைக் கட்டிவைத்திருந்தது.
அப்பாவின் சொற்ப மாதாந்த வருமானத்தில் குடும்பத்தைக் கொண்டு செல்வது அம்மாவிற்கு மிகச்சவாலான விடயந்தானேஇ இதில் மேலதிக வகுப்புகளுக்கு போவதென்பது அப்போது எங்களால் நினைத்தும் பார்க்கமுடியாத விடயம்.
தமிழ்பாடத்தில் மட்டும் என்னை யாராலும் அடித்துவிட முடியாது. தமிழ் ஆசிரியர்கள் எல்லோருக்குமே நான் செல்லப்பிள்ளைதான்….
என் உலகம் சின்னப் பாடசாலையில் இருந்து பெரிய பாடசாலைக்கு நகர்ந்திருந்தது. அப்போது நான் அழுத அழுகைக்கு அளவில்லை. அதுவும் பாடசாலை விளையாட்டுப்போட்டி நாளில் அணிநடைக்குப் போட்ட காற்சட்டை , சேட் மாற்றாமலே வீடு வந்ததும் பனை மரத்தின் கீழே அமர்ந்தபடி ஒருநாள் முழுவதும் அழுது வடித்ததும் என்னால் மறக்கவே முடியாத ஒன்று.
தொடரும்….