(நமது விசேட செய்தியாளர்)
“முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சில வாரங்களுக்கு முன்னர் பதவி விலகியிருந்தால், அவர் தலைமறைவாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கமாட்டார்.”
- இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மஹிந்த ராஜபக்ச சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்தால், அவரது விசுவாசிகள் வன்முறைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சனத் நிஷாந்த போன்றவர்கள் மஹிந்த ராஜபக்சவை அமைதியான முறையில் பதவி விலக அனுமதிக்கவில்லை.
அவரைப் பதவி விலகுமாறு நாங்கள் கோரினோம். ஏனெனில் இந்த நிலைமை ஏற்படும் என்பதை நாம் அறிந்திருந்தோம். மஹிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்ததால், நெருக்கடி தொடர்ந்து, மிகப் பயங்கரமான முடிவுக்கு வழிவகுத்தது.
புதிய இடைக்கால அரசை அமைப்பதற்காக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தினோம். எனினும், துரதிஷ்டவசமாக அந்தக் கட்சிகள் எதுவும் சாதகமான பதிலை வழங்கவில்லை” – என்றார்.
……