கட்டுரைசெய்திகள்

மியன்மாரும், ரோஹின்கியா முஸ்லீம்களும்!!

myjanmaar

பு. டயசியாசமூக விஞ்ஞானங்கள் துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

இராணுவ ஆட்சியிலிருந்து மீண்டு ஜனநாயக ஆட்சியைக் கொண்டுள்ள மியன்மார் இன்று சர்வதேச அளவில் உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளது. மியன்மார் பௌத்த மக்களைப் பெரும்பான்மையாகவும், வேறு சில இனங்களை சிறுபான்மையாகவும் கொண்ட பல்கலாசார அரசாகும். எனினும் அந்நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களான ரோஹின்கியா முஸ்லீம்கள் மீது அரசு மேற்கொள்ளும் வன்முறைகள் மனிதத்துவமற்ற செயல்களை வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்வாறு மியன்மார் அரசு மற்றும் இராணுவம் வன்முறைகளைப் பிரயோகிக்கக் காரணம் என்ன? ரோஹின்கியா முஸ்லீம்கள் எனப்படுவோர் யார்?

தற்காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பட்டியலில் முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ள ரோஹின்கியா முஸ்லீம்கள் மியன்மாரின் புதிய குடிகள் அல்ல. 12ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து வந்து குடியேறிய அரேபிய இனத்தவர்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன. இவர்கள் பங்க‍ளாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் காணப்பட்டாலும் மியன்மாரின் மேற்குக் கரையோரமான ராக்கைன் எனப்படும் மாநிலத்திலேயே அதிகளவில் வாழ்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு மேலான பிரித்தானிய ஆட்சிக் காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்களை பெறுவதன் நிமித்தமாக இந்தியாவிலும், பங்களாதேஷிலிந்தும் மியன்மாருக்குப் புலம் பெயர்ந்து சென்றனர். ஏனெனில் பிரித்தானிய ஆட்சியின் போது மியன்மார் இந்தியாவின் ஓர் மாகாணமாகக் கணிக்கப்பட்டது. எனினும் மியன்மார் நாட்டுப் பெரும்பான்மையின மக்கள் அனைத்து ரோஹின்கியா இன முஸ்லீம்களையும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களே தவிர இவர்கள் நமது நாட்டுக்குரியவர்கள் அல்ல என நோக்குகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக 1948இல் சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், பிரித்தானிய ஆட்சியின் போது இடம்பெற்ற புலம் பெயர்வானது சட்ட விரோதமானது என்று மியன்மார் அரசாங்கம் கூறியது. அவர்கள் பேசும் மொழியும் பங்களாதேஷின் வங்காளி மொழியைப் போன்று இருப்பதால் மியன்மார் நாட்டு பௌத்தர்கள் ரோஹின்கியா முஸ்லீம்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற சார்பெண்ணத்தின் அடிப்படையில் பகிரங்கமாகப் புறக்கணிக்கின்றனர். அதிலிருந்தே ரோஹின்கியா முஸ்லீம்களுக்கெதிரான தாக்குதல்களும், வன்முறைகளும் ஆரம்பித்து விட்டன. இதற்குப் பௌத்த அடிப்படைவாதமும், அரசியல் காரணிகளும் பக்கபலமாக உள்ளன. 1962இல் இவர்களுக்கு வெளிநாட்டு அடையாள அட்டையே வழங்கப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு எதுவுமே வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள், அரசியல் பங்கு பற்றுதல்கள், அரசின் உதவிகள் போன்றவை மறுக்கப்படுவதோடு திருமணம், தலைமுறை உருவாக்கம் போன்றவையும் தடுக்கப்படுகின்றது. அதன் நிமித்தமாக இவ்வின மக்கள் 1970களிலிருந்தே மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குச் சென்று குடியேறினர்.

http://www.muthukamalam.com/script/ad468X60a.php

1982இல் ரோஹின்கியா முஸ்லீம்களுக்கு எதிரான அநீதிகள் மேலும் தீவிரம் பெற்று மியன்மார் அரசாங்கம் அவர்களுக்கான குடியுரிமை அந்தஸ்தை வழங்க மறுத்து விட்டது. இன்று வரை நாட்டின் சட்ட விரோத இனம், புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்றே இவர்கள் கணிக்கப்படுகின்றனர். அத்தோடு மியன்மார் அரசு அங்கு வாழும் 135 இனங்களை அந்நாட்டின் பூர்வீக இனங்களாக அங்கீகரித்த போதிலும் ரோஹின்கியா முஸ்லீம்களை அந்நாட்டின் இனமாக அங்கீகரிக்கவில்லை. இத்தகைய ஒடுக்குமுறைகளின் உச்சகட்டம் 2012 – 2017 காலப்பகுதியிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. அடிப்படை உரிமைகள் மற்றும் தேவைகளை மறுத்தல், சிறுவர்களைக் கொலை செய்தல், பெண்களைப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்துதல், பாரபட்சப்படுத்தல், ஓரங்கட்டப்படுதல், அந்நியப்படுத்தப்படுதல் போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை இராணுவமும், உள்ளக அரசும் இழைக்கின்றது.

அதுமட்டுமன்றி மியன்மார் அரசும், இராணுவமும் ரோஹின்கியா முஸ்லீம்கள் பிறந்து வளர்ந்த சொந்த நாட்டிலிருப்பதற்குரிய உரிமைகளை வழங்காது அம்மக்களை நலிவுநிலைக்கு உட்படுத்தியுள்ளதோடு, இனப்படுகொலைகளையும் மேற்கொள்கின்றது. இதனால் உலகில் அதிக துன்புறுத்தல்களுக்கும், வன்முறைகளுக்கும் உட்படுகின்ற மக்கள் ரோஹின்கியா முஸ்லீம்கள் என ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. 2016ஆம் ஆண்டளவில் மியன்மார் “இனச் சுத்திகரிப்பு” என்ற தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபை பகிரங்கமாக அறிவித்தது.

இவ்வாறான வன்முறைகளிலிருந்து அம்மக்கள் விலகி வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வெளியேறுவதும் குற்றமாகக் கருதப்படுகின்றது. எனினும் அத்தகைய அச்சுறுத்தல்களின் மத்தியில் வன்முறைகளின் தீவிரம் அதிகரித்ததன் காரணமாகக் கடல் வழியாக உயிருக்கு உத்தரவாதமற்ற வகையில் பாதுகாப்பற்ற பயணங்களை அண்டை நாடுகளுக்கு மேற்கொள்கின்றனர். அவ்வாறு ஆபத்தான கடல் வழிப் பயணங்களைக் கடந்து செல்லும் போது பல மக்கள் இறக்கின்றனர். தப்பிப் பிழைத்தவர்களை வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகள் ஏற்றுக் கொண்டாலும், அவர்களை உரிய அடிப்படை வசதிகள் அற்ற முகாம்களிலேயே தங்க வைத்துள்ளன.

அண்மை நாடான வங்கதேசம் சில காலத்திற்கு முன்பிருந்து அவர்களை ஏற்றுக் கொண்டாலும் அவர்களுக்கான குடியுரிமையை வழங்க மறுக்கின்றது. இதனால் இரண்டு நாடுகளிலும் குடியுரிமையற்ற நிர்க்கதியான மனிதர்களாக ரோஹின்கியா முஸ்லீம்கள் காணப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் தெரிவிக்கின்றது. புலம் பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் தகவலின் படி 2016 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தொடக்கம் 2017 ஆடி மாதம் வரையான காலப்பகுதியினுள் 87,000 ரோஹின்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

வங்கதேசம் அபிவிருத்திடைந்து வரும் நாடாகும். புலம் பெயர்ந்துள்ள இத்தனை ஆயிரம் அகதிகளுக்குமுரிய அடிப்படை வசதிகளைச் சரியான வகையில் வழங்குவது சிரமமாகும். எனினும் மனிதாபிமான முறையில் வங்கதேச அரசு ரோஹின்கியா அகதிகளை ஒரு ஒதுக்கப்பட்ட தீவில் குடியேற்றியுள்ளது. பருவக்காற்றின் போது அத்தீவு வெள்ளப்பெருக்கினால் சூழப்படுவதால் மக்கள் பல இன்னல்களுக்கும், சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கின்றனர். அண்மையில் வங்கதேசத்திற்குள் 800,000 அதிகமான ரோஹின்கியா முஸ்லீம்கள் தஞ்சமடைந்ததன் காரணமாக உலகின் மிகப்பெரிய அகதி முகாமை அமைக்கப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. ஜனநாயக ஆட்சியின் கீழ் சமாதானம், ஐக்கியம் போன்றவற்றை பேண வேண்டிய மியன்மார், சிறுபான்மை மக்கள் இனத்திற்கு எதிராக பாரிய தாக்குதல்களை மேற்கொள்வது கண்டனத்திற்குரியதாகும். அத்தோடு 2006 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற ஆங் சாங் சூகியின் மௌனம் கூட பலர் மத்தியில் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளது. இராணுவ நடவடிக்கைகளை அவரால் கட்டுப்படுத்த முடியாது என்பதும், நாட்டின் குடியுரிமை அற்ற வந்தேறு குடிகள் இத்தகைய ரோஹின்கியா முஸ்லீம்கள் என்பதும் ஆங் சாங் சூகியின் மௌனத்திற்கான காரணங்களாக சுட்டிக் காட்டப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் இவை அனைத்துமே அப்பாவிக் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், ஆண்களின் அழிவுகளுக்கு வித்திடுகின்றன. இதனால் வாழ்க்கையில் நிலையற்ற தன்மைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் ரோஹின்கியா முஸ்லீம்கள் என்பது மட்டும் உண்மை.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் இவ்விவகாரங்களில் ஈடுபட்ட போதிலும் ரோஹின்கியா இன மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள், கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களில் ஆழமான விசாரணைகளை நடத்தவில்லை எனவும் விமர்சனக் கருத்துக்கள் நிலவுகின்றன. ஊடகச் சுதந்திரம் என்பது ஜனநாயக நாட்டில் மிகவும் அவசியமானதாகும், எனினும் மியன்மார் அரசு ராக்கைன் மாநிலத்தினுள் ஊடகவியலாளர்களையும், உதவி வேலையாளர்களையும் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் நிலவுகின்றன. அதுமட்டுமன்றி ரோஹின்கியா முஸ்லீம்களுக்கு யாரும் உதவினால் அவர்கள் பயங்கரவாதிகள் என்று கருதப்படுவர் என்ற சட்டங்களும் அந்நாட்டினுள் நிலவுகின்றது.

ரோஹின்கியா முஸ்லீம்களைப் பாதுகாப்பதற்காக “அரகேன் ரோஹின்கியா பாதுகாப்புப் படை” (ARSA) எனப்படும் படைக்குழு இயங்குகின்றது. மியன்மார் அரசும், இராணுவமும் அப்படையைப் பயங்கரவாதக் குழுவாகக் கருதி தாக்குதல்களை மேற்கொள்கின்றது. இப்படை மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவே குரல் கொடுக்கின்ற படையாகும். எனினும் இராணுவம் இப்படையினர் என்ற ஐயத்தின் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதாரண மக்களையே கொன்று குவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மியன்மாரில் இடம்பெறும் இராணுவத்தின் செயற்பாடுகள் போர்க்குற்றத்திற்கு சமமானது எனக் கூறியுள்ளது. அத்தோடு அதன் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்ரேரெஸ் ரோஹின்கியா மக்களுக்கெதிரான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும், வன்முறைகளையும் மனிதாபிமானப் பேரழிவுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில் வட கொரியா, கட்டார் நாடுகளில் இடம் பெற்ற பொருளாதாரத் தடைகளைப் போன்று மியன்மாருக்கும் பாரிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று கடுமையாகக் கூறியுள்ளார்.

ஒரு நாடே தன் நாட்டின் பூர்வீகக் குடிகள் மீது வன்முறைகளையும், கொடூரங்களையும் இழைப்பது மனிதப் பாதுகாப்பிற்கு எதிரானதாக உள்ளது. இக்கொடூரங்களை தட்டிக் கேட்க வேண்டிய இஸ்லாமிய நாடுகளே ஆர்ப்பாட்டங்களையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் தங்கள் நாடுகளுக்குள்ளேயே நடத்தி விட்டுச் சமூக வலைத்தளங்களின் முலமாக இரங்கல்களை மட்டும் விடுப்பது வருத்தத்திற்குரியதாகும். எனவே “இனம்”, “மதம்” என்னும் வார்த்தைகளை மறந்து மனிதாபிமானமான ரீதியில் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ரோஹின்கியா இன மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது தற்கால தேவைப்பாடாக உள்ளது.
உசாத்துணைகள்
1. http://www.google.lk/amp/www.aljazeera.com/amp/indepth/features/2017/08/rohingya-muslims-170831065142812.html

2. http://www.google.lk/amp/news.sky.com/story/amp/un-braced-for-further-exodus-of-rrohingya-from-myanmar-1106987

3. http://www.thegurdian.com/world/rohingya

4. http://www..virakesari.lk/article/23857

Related Articles

Leave a Reply

Back to top button