வலிக்கும் வாழ்க்கை ….
மனிதநேயம் எங்கே போகிறது? – இது ஒரு உண்மைச் சம்பவம்!!
அன்பு, இரக்கம், கருணை, ஈவு, தயவு, தோழமை இவையெல்லாம் மனிதருக்கு இருக்கவேண்டிய பண்புகள். சக மனிதர்களிடம் குறிப்பாக துயரில் தவிப்போரிடம் இத்தகு குணங்களில் ஒன்றைக் காட்டுவதே மனிதநேயம் எனப்படுகிறது. ஆனால் இயந்திரங்களுடனான பணியின் அதிகரிப்புத் தன்மை மற்றும் முகம் பார்த்து பேசுதலைக் காட்டிலும் முகம் மறைத்து பேசும் அலைபேசி வழி உரையாடலின் அதிகரிப்பு இவையெல்லாம் மன ஈரத்தை ஒருவேளை பறித்துக்கொண்டுவிட்டதா?
என் அயல்வீட்டுத் தோழியின் கணவர் திடீரென ஒரு விபத்தில் இறந்துவிட்டார். கணவனின் எதிர்பாராத மறைவு அந்தக் குடும்பத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சிறு குழந்தைகளின் ‘அப்பா எங்கே ?’ என்ற நச்சரிப்பு வரப்போகும் கால முழுமைக்குமான துயரம்…தாய்க்கு ஒரே மகனான அவரின் இழப்பால் மாமியாரின் உடல்நிலை மனநிலை இரண்டிற்குமே ஏற்பட்டுள்ள பாதிப்பு இவையெல்லாம் அந்தப் பெண்ணை முழுச்சிந்தனை அற்றவராய் மாற்றியிருந்தது.
கணவனின் இழப்பீட்டினால் குறிப்பிட்டளவான காப்புறுதி தொகை மகன்மாருக்கு கிடைக்கும் என்பதால் அரச அலுவலகம் ஒன்றிற்கு இறப்பு பத்திரம் தொடர்பான பதிவு ஒன்றிற்காகச் சென்றிருந்தார்.
கொரோனா பாதுகாப்பிற்காக பொலித்தீன் மறைப்பு இடப்பட்டிருந்தமையைக் கவனிக்காது அலுவலர்களின் அறைக்குள் பிரவேசித்துவிட்டார். அத்தனை பேரும் ஏதோ பேயைக் கண்டது போல அச்சத்துடனும் அருவருப்பான ஒன்றைக் கண்டது போல அசூசையுடனும் பார்த்தது மட்டுமல்லாது வெளியே வந்த அவர் வரிசையில் நின்று பதிவிற்காக வந்தபோது அவரது பத்திரத்தை நன்றாகப் பார்த்துவிட்டு ‘பெயர் மட்டும் நன்றாக உள்ளது ஆனால்…’ என இழுத்துக்கொண்டே ஒரு ஆண் அலுவலர் சொல்ல மற்றவர்கள் கேலியாகச் சிரித்துள்ளனர்.மனிதர்கள் தன்னுடைய உறவுகளை ஏன் இப்படி ஒரு நிலையில் நினைத்துப் பார்ப்பதில்லை.
அந்த அறையை விட்டு வெளியே வந்து சுமார் முப்பது நிமிடங்கள் வரை வாசலில் இருந்து குழுறிக்குழுறி அழுதிருக்கிறார் அந்தப் பெண். வேறு அலுவல்களுக்காக வந்தவர்கள் ‘என்ன நடந்தது?’ எனக்கேட்க ‘எனது கணவர் இறந்துவிட்டார் எனக்கு பைத்தியம் அதுதான் அழுகிறேன்’ எனக்கூறிவிட்டு நடந்ததைச் சொல்லியிருக்கிறார்.
அதற்கு அவர்கள் ‘பதவியும் பணமும் பலரை பைத்தியமாக வைத்திருக்கிறது . இவர்கள் இப்படித்தான்…நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்’ என ஆறுதல் கூறியிருக்கின்றார்கள்…
என்னிடம் வந்து சொல்லும் போது. ‘அத்தனை பேரும் ஒருசேரப் பார்த்த பார்வையும் அந்தக் கேலியும் நிர்வாணமாக நின்றதுபோல இருந்தது’ எனக்கூறிவிட்டு கதறியதை இப்போது நினைத்தாலும் மனம் கொதிக்கிறது.
அவர் செய்தது தவறுதான். அலுவலக நடைமுறை மீறல்தான். ஆனால் வீதியில் செல்லும் போதே விழுந்து இறக்கும் நிலையில் நம்முடைய நாட்டில் கொரோனா நிலைவரம் இல்லையே… அதற்காக இத்தனை கேலி அவசியமானதா? இத்தனைக்கும் அவர் ஒன்றும் படிக்காத பாமரப் பெண் கிடையாது. உயர்தரம் முடித்த ஒரு அழகுகலை நிபுணர். தைரியமான பெண். வலிகள் எல்லோருக்கும் பொதுவானது தானே
வாழ்க்கையில் நாம் எங்கே போகிறோம்? எதைச் சாதிக்கப்போகிறோம்? துண்டாடப்படும் உணர்வுகளும் தோற்றுப்போகும் நியாயங்களும் மலிந்து கிடக்கிறதே..மனிதர்களிடம் .மனிதம் எஞ்சுமா????
கோபிகை.