போதைப்பொருட்களை பாவித்து பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பஸ்களை இயக்கும் பஸ் சாரதிகளை கைது செய்யும் வகையில் மேல் மாகாணத்தில் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் போதைப்பொருட்களை பாவித்து பஸ்களை செலுத்திய 15 பஸ் சாரதிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பல சாரதிகள் போதைப்பொருட்களை பாவித்து பஸ் மற்றும் ஏனைய வாகனங்களை ஓட்டிச் செல்வதாக எழுந்த முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மதுபானம் அருந்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அல்கோ லைசிர் ட்யூப்களை பயன்படுத்தி கைது செய்து வைத்தியர்களிடம் முற்படுத்தப்பட்ட போதிலும் போதைப்பொருட்களை பாவிக்கும் சாரதிகளை பரிசோதிக்கும் முறைமை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை இதற்குத் தேவையான நிதியை வழங்கியதையடுத்து, ஆபத்தான மருந்துக் கட்டுப்பாட்டுச் சபை பொலிஸ் திணைக்களத்திற்கு விசேட பரிசோதனைக் குழாய்களை வழங்கியதுடன், மேற்படி சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை அண்மையில் மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
மேல் மாகாணத்தில் உள்ள 106 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் 775 பஸ்களைச் சோதனையிட்டதுடன், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 375 பஸ்களின் சாரதிகளின் உமிழ்நீரை ஆராய்ந்ததில் மேற்கண்ட 15 சாரதிகள் அடையாளம் காணப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் சிறுநீர் மாதிரிகள் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் பஸ்களை செலுத்தினால் 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்படுவதுடன் சாரதி அனுமதிப்பத்திரமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
முன்னோடித் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து நாடளாவிய ரீதியில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.