கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வெளியீடான முதுநிலை ஊடகவியலாளர் இ.பாக்கியராசாவின் வளம்மிகு மண்டூர் நூல் அரங்கேற்றம் ஞாயிற்றுக்கிழமை (02.01.2022) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் செ.யோகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷ்ஜானந்தா ஆன்மீக அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய நிபுணர் வே.விவேகானந்தராசா பிரதம விருந்தினராகவும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி. இ.இராகுலநாயகி சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் இந்நிகழ்வில் வைத்தியர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், என பலதரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
மங்கள விளக்கேற்றல், இறை வணக்கம், அக வணக்கம், சுவாமியின் ஆசியுரை மட்டக்களப்பு காந்தி சேவா சங்க பொதுச் செயலாளர் கதிர் பாரதிதாசனின் வரவேற்புரை, கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் இ.தேவஅதிரனின் வெளியீட்டுரை, கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் அருட்பணி அ.அ. நவரெத்தினம் அடிகளின் ஆய்வுரை, விருந்தினரகளின் உரை, நூலாசிரியரின் ஏற்புரை, என்பன இடம்பெற்றன.
இதன்போது ஸ்ரீ மத் சுவாமி தக்ஷஜானந்தா நூலின் முதற் பிரதியை அவுஸ்திரேலியா வைத்திய கலாநிதி தி.சிவசீலனுக்கு வழங்கி நூலை அரங்கேற்றி வைத்தார். இதன்போது கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தினரால், 50 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பிலிருந்து ஊடகப் பணியாற்றிவரும் சிரேஸ்ட ஊடகவியலாளர், எழுத்தாளர் இ.பாக்கியராசாவிற்கு வாழ்த்துப்பா வழங்கி, பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்தனர்.
செய்தியாளர் – சக்தி