ரஷ்யாவில் தமது செயற்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளன அமெரிக்காவைச் சேர்ந்த விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள்.
ரஷ்யாவின் யுக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து தனது செயல்பாடுகளை இடைநிறுத்துவதாகவும், ரஷ்யாவில் உள்ள தமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுடனான அனைத்து வணிகங்களையும் இடைநிறுத்துவதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இன்னும் சில நாட்களில், ரஷ்யாவினுள் வழங்கப்பட்ட விசா அட்டைகள் மூலம் முன்னெடுக்கப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் நாட்டிற்கு வெளியே செயற்படமாட்டாது என்றும் வெளிநாடுகளால் வழங்கப்படும் விசா அட்டைகள் ரஷ்யாவினுள் செயற்படமாட்டாது எனவும் விசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விசாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அல் கெலி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷ்யா மிலேச்சத்தனமாக யுக்ரைன் மீது மேற்கொள்ளும் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அவ்வாறே, ரஷ்ய வங்கிகளால் வழங்கப்படும் மாஸ்டர்கார்ட் அட்டைகளும் கொடுக்கல் வாங்கலின்போது அல்லது ஏ.டி.எம்.களில் தொழிற்படமாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.