ஓமன் நாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இலங்கையில் இருந்து பணிப்பெண்ணாகச் சென்றவரை வீட்டு உரிமையாளர் தடுத்து வைத்து மிக கொடூரமான முறையில் சித்திரவதை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
தான் சுகயீனமடைந்த நிலையில் இருப்பதாகவும் உரிமையாளர் தன்னை விடுவிக்க பல லட்சம் ரூபாய் பணம் கோருவதாகவும் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை எனவும் தன்னை அந்த நபரிடம் இருந்து காப்பாற்றுமாறும் குறித்த பெண் தனது காணொளியில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தப் பெண்ணை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அந்த நாட்டு தூதரகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, சுற்றுலா விசா மூலம் டுபாய் நாட்டிற்குச் சென்ற இலங்கைப் பணிப்பெண்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் இலங்கைப் பெண்கள் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்குள்ளாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலா விசாவில் டுபாய்க்கு அழைத்துச் செல்லப்படும் பெண்களை வேலைக்கு அனுப்பாமலும், உணவு நீர் வழங்காமலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.