இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பசளை விடயத்தில் அரசின் அறிவிப்பு விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ளது!

உரத்தை முற்று முழுதாகத் தடுத்து, இயற்கை உரப் பாவனையின் மூலம் விவசாயத்தை மேற்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பானது விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ளது. இது உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் நம்பிக்கையைத் தளர்வடையச் செய்ததுடன் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் ஆர்வத்தையும் குறைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. என சமத்துவக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  மு. சந்திரகுமார்(M.Chandrakumar) விடுத்துள்ள அறிக்கையில்,

 லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் பொருளாதாரம் நிலைகுலைவதோடு சமூகப் பொருளாதாரமும் நாட்டின் பொருளாதாரமும் கீழிறங்கும் நிலையே உருவாகியுள்ளது.

அத்துடன் உணவு உற்பத்தியிலும் பாரிய பின்னடைவு உண்டாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அசேதனப் பசளைக்குப் பதிலாகச் சேதனைப் பசளைப் பாவனையை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் அதைச் செய்வதற்கான கால அவகாசம் விவசாயிகளுக்கு வேண்டும்.

வரையறுக்கப்பட்ட அளவிலான உரப்பாவனைக்கான சூழலைப் பேணிக்கொண்டு படிப்படியாக சேதனப்பசளைப் பாவனையை ஊக்கப்படுத்தும் பொறிமுறையே பொருத்தமானது. அதுவே நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகும். இல்லையெனில் உணவுற்பத்தி வீழ்ச்சி ஏற்பட்டு அதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலையே ஏற்படும்.

இது எமது மக்களுக்கும் நாட்டுக்கும் பாரிய பின்னடைவை உண்டாக்கும். எமது நாடும் மக்களும் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சூழலில் இது இரட்டை நெருக்கடியை உண்டாக்கும்.  இது பெரும்போகச் செய்கைக் காலமாகும். இதன்போதே மூன்று மடங்கினர் விவசாயச் செய்கையில் ஈடுபடுகின்றனர். இந்தச் செய்கையில் பாதிப்பும் வீழ்ச்சியும் ஏற்படுமானால் அவர்கள் மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர்.

அதிலிருந்து விவசாயிகளால் உடனடியாக மீள முடியாது. பின்னர் அவர்களுக்கு நிவாரணமளிக்கும் நிலையே ஏற்படும்.

எமது நாட்டில் இன்று விவசாயச் செய்கையிலேயே அதிகமானோர் ஈடுபடுகின்றனர். அதிலும் வடக்குக் கிழக்கில் ஏற்பட்ட போரினால் பிற தொழில்துறைகளும் உற்பத்திக் கட்டமைப்புகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டு, விவசாயத்தையே பெரும்பாலோனோர் தமது ஒரே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களுடைய தொழிலும் வருவாயும் வாழ்வும் இந்தப் பெரும்போகச் செய்கையிலேயே தங்கியிருப்பதால் அரசாங்கமானது நடைமுறை யதார்த்தை உணர்ந்து வரையறுக்கப்பட்ட அளவிலேனும் அசேதனப்பசளைக்கு இடமளித்து கட்டம் கட்டமாக சேதனப் பசளைப் பாவனைக்குச் செல்லும் வகையைச் செய்ய வேண்டும்.

அதுவே விவசாயிகளையும் உற்பத்தியையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்கும். ஆகவே அரசாங்கம் தன்னுடைய தீர்மானத்தைப் பரிசீலனை செய்து விவசாயிகளையும் விவசாயத்துறையையும் வளப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

Related Articles

Leave a Reply

Back to top button