அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் உயிர்க்கொல்லி நோயான ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து முற்றிலும் குணமடைந்து இருக்கும் தகவல் மருத்துவத் துறையில் புது உற்சாகத்தையும் மலைப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மனிதனின் நோய் எதிர்ச்சி சக்தியை முற்றிலும் குறைத்து பின்னர் உயிரைக் குடிக்கும் கொடிய நோயாக HIV நோய் கருதப்படுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் இந்த நோயிலிருந்து முற்றிலும் குணமடைய முடியாது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படியிருக்கும்போது அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு கடந்த 2013 இல் HIV பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. பின்னர் 4 வருடங்கள் கழித்து அவருக்கு லுகேமியா எனப்படும் புற்றுநோய்த் தாக்கமும் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் அந்த இளம் பெண்ணிற்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மரணப்படுக்கையில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் தொப்புள் கொடி ரத்தச் சிகிச்சையும் அளித்துள்ளனர். இந்நிலையில் நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அவர் பெற வேண்டும் என்பதற்காக அவருடைய உறவினர்கள் பலரும் ரத்ததானம் செய்துள்ளனர். இதனால் அவருடைய உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகுமா? என்பதை மருத்துவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.
அந்தச் சிகிச்சை வெற்றிபெற்று 4 வருடங்களுக்குப் பிறகு அந்தப் பெண் லுகேமியா புற்றுநோயில் இருந்து முற்றிலும் குணமானார். மேலும் 14 மாதம் கழித்து அவருக்கு HIV டெஸ்ட் எடுத்தபோது மருத்துவர்களே அதிர்ந்து போயுள்ளனர். காரணம் உறவினர்களின் இரத்தம் ஸ்டெம் செல்கள் மூலம் செலுத்தப்பட்டதால் அவருக்கு இயற்கையாகவே HIV நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகி அவர் முற்றிலும் குணமாகியுள்ளார். இந்தத் தகவல் தற்போது ஒட்டுமொத்த உலகத்திலும் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்குமுன்பு தி மோதி ரே பிரவுன் என்பவர் HIV ஆல் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். நோயிலிருந்து குணமான அவர் 12 ஆண்டுகள் நோயில்லாமல் வாழ்ந்த நிலையில் 2020இல் புற்றுநோயால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2019 இல் HIV நோயால் பாதிக்கப்பட்ட ஆடம் காஸ்புலிஜோவு அந்த நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.