இந்தியாஇலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மீன்பிடிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி எமது வயிற்றில் அடிக்க வேண்டாம் : இந்திய மீனவர்கள்

இந்திய தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கையின் வடக்கு மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் வேதனையளிப்பதாகவும், ஆனால் இலங்கை மீனவர்கள் முன்னெடுத்த போராட்டம் நியாயமானது என்பதை நாம் மறுக்கவில்லை என கூறும் இந்திய ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் ஜேசுராஜ், இலங்கை மீனவர்கள் வலியுறுத்தும் விதத்தில் மீனவர் சட்டத்தை நடைமுறைப்படுத்தி எமது வயிற்றில் அடிக்காது  இலங்கை -இந்திய தரப்பினர் முறையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சுமூகமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கம் தடை விதித்தாலும் எம்மால் எல்லை தாண்டாது மீன்பிடியில் ஈடுபட முடியாது என்பதே தமிழக மீனவர்களின் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகளில் இலங்கை மீனவர்கள் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கை வடக்கு மீனவர்கள் இன்று கடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இந்திய தமிழக மீனவர்களின் நிலைப்பாடு குறித்து வினவியபோது இது குறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜ் கேசரிக்கு கூறுகையில்,

இலங்கை மீனவர்கள் இன்று முன்னெடுத்துள்ள போராட்டம் நியாயமானது என்பதை நாம் மறுக்கவில்லை, ஆனால் இந்த போராட்டம் எமக்கு எதிரானது என்பது மிகுந்த வேதனையை தருகின்றது.

நாமும் இலங்கை மீனவர்கள் போன்று மிகவும் கஷ்டப்பட்டு, கடன்களை பெற்று வறுமையில் இந்த தொழிலை செய்து வருகின்றோம்.

எம்மால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் அது குறித்து நாம் கவலைப்பட்டுகின்றோம். அதே நிலையில் இந்த பிரச்சினைகள் குறித்து முறையான பேச்சுவார்த்தைகளை நடத்தி உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும். 

கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மூன்று கட்டங்களில் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த பேச்சுவார்த்தைகளில் எமது தரப்பில் இருந்து ஒரே குழுவே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்த போதிலும் இலங்கை தரப்பில் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை.

அவர்கள் ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும்  ஒவ்வொரு பிரதிநிதிகள் குழுவை நியமித்த காரணத்தினால் இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை.

அதுமட்டுமல்ல இலங்கை கடல் எல்லை குறுகியது, இங்கு எல்லைகளை போட்டுக்கொண்டு மீன்பிடியில் ஈடுபட முடியாது, ஆனால் வளங்களை பாதுகாக்கும் கடமை எமக்கும் உண்டு. இழுவை படகு முறையிலான மீன்பிடியை ஒரேடியாக எம்மால் கைவிட முடியாது, ஆனால் நாம் இப்போதும் வெகுவாக அவற்றை குறைத்துக்கொண்டு வருகின்றோம். இன்னும் சிறிது காலத்தில் முழுமையாக நாம் இழுவைப் படகுகளை பாவிப்பதை கைவிட்டு ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்றுவிடுவோம். 

அதற்கான பல கட்ட வேலைத்திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகின்றது. எனவே அது வரையில் ஒரு பொது இணைக்கப்பாடுடன் இலங்கை மீனவர்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமது வாழ்வாதாரமும் மீன்பிடியை நம்பியே உள்ளது. எனவே எமக்கு மீன்பிடியை விட்டால் வேறு தெரிவு இல்லை. எமது மீனவர்கள் நாளாந்தம் இந்த வாழ்வாதாரத்தை நம்பியுள்ளனர்.

இலங்கை மீனவர்களின் நிலைமைகள் எமக்கு நன்றாக விளங்குகின்றது. ஆனால் யுத்த காலத்தில் இருந்து நாம் மீன்பிடியில் ஈடுபடும் பகுதிகளில் தற்போது வடக்கு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை நாம் மறுக்கவில்லை, ஆனால் அவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் எமக்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றே கூறுகின்றோம். இலங்கை மீனவர்களை பாதிக்காத வகையில் முழுமையாக நாம் பொறுப்பை உணர்ந்து செயற்படுவோம். 

இலங்கை மீனவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அடுத்து இலங்கை கடற்படையும் அரசாங்கமும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கின்ற காரணத்தினால் எமது படகுகள் கைப்பற்றப்படுகின்றன. எமது மீனவர்கள் தாக்கப்படுகின்றனர், கைதுகள் இடம்பெறுகின்றது.

எமக்கும்  குடும்பம், பிள்ளைகள் உள்ளனர். எனவே இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி எமது வயிற்றில் அடுக்காது இலங்கை -இந்திய தரப்பினர் முறையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சுமூகமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். 

இலங்கை அரசாங்கம் தடை விதித்தாலும் எம்மால் எல்லை தாண்டாது மீன்பிடியில் ஈடுபட முடியாது, ஆகவே எமது மீனவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். இதற்கு விட்டுக்கொடுப்பு ஒன்றே தீர்வாகும் என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button