இலங்கைசெய்திகள்

முன்னணியை ச் சாடுகிறார் சுரேஷ்!!

suresh

செய்தியாளர் – சுடர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசு நினைக்கும் விடயங்களை வடக்கு மாகாணத்தில் நிறைவேற்றுகின்றார்கள் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்த்தாவது:-

“13ஆவது திருத்தச் சட்டத்தை நாம் தமிழரின் தீர்வாக ஒருபோதும் ஏற்கவில்லை. அதனை ஏற்கப்போவதுமில்லை. ஆனால், தற்போதுள்ள பூகோள அரசியல் நிலையில் தமிழ் மக்களைப் பாதுகாக்க அதாவது வடக்கில் இராணுவமயமாக்கல், சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து தமிழ் மக்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியே ஆறு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளோம்.

அந்தக் கடிதத்தின் தொடர்ச்சியாக நாம் டில்லி சென்று இந்தியப் பிரதமரைச் சந்தித்து அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் மத்தியில் போலிப் பிரசாரத்தை மேற்கொள்வது போல் நாங்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை; ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசு எதைச் செய்ய நினைக்கின்றார்களோ அதனை வடக்கில் நிறைவேற்றுகின்றார்கள். அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கின் முகவர்களாகச் செயற்படுகின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 13ஆவது திருத்தம் தேவையில்லை; அபிவிருத்தி மட்டும் போதும் எனக் கூறுகின்றார். அதேபோல் அரசில் உள்ளவர்களும் அதனைக் கூறுகின்றார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் வடக்கில் அந்தக் கோரிக்கையையே செயற்படுத்துகின்றார்கள்.

கட்சியிலிருந்து மணிவண்ணன் பிரிந்து சென்றுவிட்டதால் தமது கட்சியை மணிவண்ணன் கொண்டு சென்று விடுவார் என்பதற்காக கட்சியில் உள்ளோருக்கு ஏதாவது ஒரு வேலையைக் கொடுக்க வேண்டும்தானே. அதற்காகத்தான் 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சவப்பெட்டியில் வைத்து மக்கள் மத்தியில் ஊர்வலமாகக் கொண்டு செல்கின்றார்கள். அவர்கள் தமது கட்சியைக் காப்பாற்றுவதற்காக இவ்வாறு போலிப் பிரசாரத்தை மேற்கொள்கின்றார்கள்.

மக்களை ஏமாற்றி கோட்டாபய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள். எனவே, மக்கள் போலிப் பிரசாரங்களை நம்பக்கூடாது” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button