இலங்கைசெய்திகள்

தோல்விப் பயத்தால் தேர்தலுக்கு அஞ்சுகின்றது ராஜபக்ச அரசு – ஈ.பி.ஆர்.எல்.எப். குற்றச்சாட்டு!!

suresh

Roundcube Webmail :: தோல்விப் பயத்தால் தேர்தலுக்கு அஞ்சுகின்றது ராஜபக்ச அரசு! – ஈ.பி.ஆர்.எல்.எப். குற்றச்சாட்டு நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் தோற்று விடுவோம் என்ற அச்சத்தில் மக்களினுடைய ஜனநாயக உரிமையைப் பறிக்கின்ற அரசாகவே தற்போதைய ராஜபக்ச அரசு உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலும் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை உள்ளூராட்சி சபைக்கும், மாகாண சபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆனால், பல காலமாக மக்களுடைய ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த அரசும் சரி தற்போதைய அரசும் சரி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இருக்கட்டும், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதாக இருக்கட்டும் அந்த தேர்தல்களை முகம் கொடுக்கவே அஞ்சுகின்ற சூழல் காணப்படுகின்றது.

இன்று அசு எந்தவொரு தேர்தலையும் நடத்தக்கூடிய சூழ்நிலையில் இல்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது. மிகவும் மோசமான பொருளாதார நிலைமை, அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி, தொழிற்சங்கப் போராட்டங்கள் என்பனவற்றால் ஒட்டுமொத்தமாக பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் தங்களது அரசு கடந்த இரண்டு வருடங்களாகச் செயலற்ற அரசு என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் கொரோனாவைக் காரணம் கூறுகின்றார்கள். ஆனால், உண்மையாகவே இந்த அரசை நடத்தக் கூடிய திறமை இந்த அரசிடம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

இந்த அரசின் உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கையும் சரி, வெளிவிவகாரக் கொள்கையும் சரி தோல்வியில் முடிந்த காரணத்தால்தான் இன்று நாடும் தோல்வி அடைந்த நிலையில் காணப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் தோற்று விடுவோம் என்ற அச்சத்தில் மக்களினுடைய ஜனநாயக உரிமையைப் பறிக்கின்ற அரசாகவே தற்போதைய அரசு இருக்கின்றது. ஆகவே, அந்தந்தக் காலத்தில் தேர்தல் நடைபெற்று வருவதென்பது கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில்தான் மக்கள் பிரதிநிதிகள் சேவையாற்ற முடியும். ஆகவே, மீண்டும் மக்களிடம் ஆணை பெறுவதென்பது அவசியம். தங்கள் வசதிக்கேற்ப தேர்தலை ஒத்திவைப்பது என்பது ஜனநாயக மரபல்ல. இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

அரசு சகல தேர்தல்களையும் நேரகாலத்துடன் மக்களது மனித உரிமைகளை பாதுகாத்து, மக்களின் ஆணைகளைப் பெற்று சேவை செய்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கோரிக்கை” – என்றார். செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button